தமிழ்நாடு

tamil nadu

"சாதிய வன்முறையில் ஈடுபடுவோர் மீது உபா சட்டம் பாய வேண்டும்" - விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 5:35 PM IST

Updated : Nov 13, 2023, 6:47 PM IST

VCK MP Ravikumar: தலித்துகளுக்கு எதிராகத் தொடரும் வன்முறையைக் கட்டுப்படுத்த, சாதிய வன்முறையைப் பயங்கரவாதமாக அறிவித்து உபா(UAPA) சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். அவருடன் ஈடிவி பாரத் தலைமை நிருபர் எம்.சி.ராஜன் நடத்திய சிறப்பு நேர்காணலின் தொகுப்பை விரிவாக பார்க்கலாம்..

VCK party General Secretary Ravi Kumar said UAPA Act should be amended to prevent caste violence
ரவிகுமார் எம்.பி

சென்னை:தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதற்கு ஆளும் திமுக அரசை மட்டும் பொறுப்பாக்குவது தவறு என்று கூறும் அவர், வலதுசாரி சக்திகளான பாஜக, ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சியே அரசியல், சமூகம் முதல் சினிமா வரையிலான அனைத்து தளங்களிலும் தலித்துகளுக்கு எதிரான உளவியல் வலுப்பெறக் காரணமாக அமைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் கருத்து தெரிவித்துள்ளார்.

தலித்துகளுக்கு எதிரான வன்முறையைப் பயங்கரவாதமாக அறிவிக்க வேண்டிய தேவையும் கட்டாயமும் தற்போதைய சூழலில் எழுந்துள்ளது. நடைமுறையில் உள்ள வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் (SC, ST Prevention of Atrocities Act 1989) போதாமை மற்றும் அது முறையாகச் செயல்படுத்தப்படாததும் இதற்கான முதன்மைக் காரணம் என்று விளக்குகிறார் எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார்.

திமுக ஆட்சியில் இவை அதிகரித்திருப்பதை ஏற்றுக்கொள்ளும் அவர், இது ஒரு தொடர்ச்சிதான் என்று கூறுகிறார். தற்போதுள்ள சட்டம், மத அடிப்படையிலான வன்முறை மற்றும் மோதல்களை மட்டுமே பயங்கரவாதமாக வரையறுக்கிறது. ஆனால், இந்தியாவில் சாதிய வன்முறைகளே மத வன்முறைகளைவிட அதிகமாகவும், பொது அமைதிக்கு அச்சுறுத்தலாகவும் சமூக ஒற்றுமைக்கும், மக்களின் உடைமைக்கும் பெருந்தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளது.

கொலைகள், சிறுமிகள் உட்படப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, வீடுகள் மற்றும் உடைமைகள் சூறையாடல் போன்றவையே மத அடிப்படையிலான குற்றங்களைவிடப் பெருமளவில் நடைபெறுகின்றன. எனவே, பயங்கரவாதத்திற்கான வரைமுறையை விரிவுபடுத்தி உபா (Unlawful Activities Prevention Act) சட்டத்தில் தேவையான மாற்றம் கொண்டு வரவேண்டும்.

அடிப்படையில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனையாக உள்ள ஒன்றினை வெறும் சட்டம் - ஒழுங்கு சிக்கலாகப் பார்க்கும் போக்கு சரிதானா என்ற கேள்விக்கு, இந்த பிரச்சனையைக் கட்டுப்படுத்த அரசியல் உறுதி வேண்டும் என்று ஒத்துக்கொள்ளும். அதே சமயம், பெருகிவரும் தலித்துகளுக்கு எதிரான வன்முறையைப் புரிந்துகொள்வதிலும் அணுகுவதிலும் மாற்றம் தேவை என்கிறார்.தான் 2019ல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இருந்தே இந்த கோரிக்கையை முன்வைத்து வருவதாகத் தெரிவிக்கிறார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட நிறவெறிக்கு எதிரான குற்றங்களைப் பயங்கரவாதமாக வரையறுக்கவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த எம்.பி.ரவிக்குமார், சாதி மேலாதிக்கத்தினால் வரும் வன்முறைகள் நிறவெறியை விட, பிற பாகுபாடுகளை விட மிக மோசமானது என்கிறார். 1960க்கு பின்னரே அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு முடிவுக்கு வந்தது. அதனால், அங்கு ஒரு கறுப்பினத்தவர் அதிபராக முடிந்துள்ளது.

நூற்றாண்டுகள் சமூக நீதி இயக்கம் கண்ட தமிழ்நாட்டில், இந்தியாவிலேயே அதிக அளவில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை அதிகம் இருக்கிறது ஏன் என்ற வினாவிற்கு, சமூக நீதிக்கு மட்டுமல்ல, தலித்துகளுக்கு எதிரான வன்முறைக்கும் ஒரு மாடல் இங்கு உள்ளது. இதற்கு காலனியாதிக்கம் முதல் பல வரலாற்றுக் காரணிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், இதற்கு திமுக ஆட்சியை மட்டுமே பொறுப்பாக்குவது சரியல்ல. வலதுசாரி சக்திகளான பாஜக, ஆர்.எஸ்.எஸ்-இன் வளர்ச்சி இதில் பெரும் பங்கு வகிக்கிறது. என்கிறார்.

10 வருடங்களுக்கு முன் திராவிடர் கழகம், திமுக, இடதுசாரி கட்சிகளின் பரப்புரை, மேடைப் பேச்சுகள் போல் இப்போது இல்லையே. சினிமா மொழியும் தான். இவ்வாறு அரசியல் முதல் அனைத்து தளங்களிலும் வலதுசாரித் தாக்கம் உள்ளது மறுக்கமுடியாது. இதில், திமுகவை மட்டும் குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்வது தவறு என விளக்குகிறார்.

தோழமைக் கட்சி என்பதால், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்க விசிகவுக்கு தயக்கம் என்ற பரவலான விமர்சனத்தை மறுத்த அவர், கட்சி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருவதைச் சுட்டிக்காட்டினார். தோழமை என்பதற்காகச் சமரசம் செய்யவில்லை என்றும், அவர் தலித்துகளுக்கு எதிரான குற்றத்துக்காக, நெல்லை இளைஞர் இருவரை வன்கொடுமை செய்தவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளது இதுவே முதன்முறை, வரவேற்கத்தக்கது என்றார்.

இதையும் படிங்க: அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு சம்பவம்: பாதிக்கபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்த திருமாவளவன்!

Last Updated :Nov 13, 2023, 6:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details