தமிழ்நாடு

tamil nadu

அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்.. வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு - முன்பதிவு இன்று தொடக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 6:57 AM IST

Updated : Dec 14, 2023, 7:31 AM IST

Vande Bharat Sabari Special trains: சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருப்பதால், பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு வந்தே பாரத் ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்.. வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு - முன்பதிவு இன்று தொடக்கம்!
அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்.. வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு - முன்பதிவு இன்று தொடக்கம்!

சென்னை: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்கு வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து, பக்தர்கள் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அதிலும், இங்கு கேரள பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில், இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து, பாதுகாப்பு பணி ஆகியவற்றில் சபரிமலை தேவசம் நிர்வாகம் மற்றும் கேரள மாநில நிர்வாகம் சற்று திணறி வருகிறது. இந்த நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு வந்தே பாரத் ரயில்களை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோட்டயம் வரை செல்லும்.

இவ்வாறு வாராந்திர சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க உள்ள நிலையில், இதில் மொத்தம் 8 சேவைகள் வழங்கப்படுகிறது. இதன்படி 06151 என்ற எண் கொண்ட வந்தே பாரத் சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பர் 15, 17, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில், அதாவது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினமே மாலை 4.15 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

அதேபோல், மறுமார்க்கமாக 06152 என்ற எண் கொண்ட வந்தே பாரத் சிறப்பு ரயில், கோட்டயத்தில் இருந்து டிசம்பர் 16, 18, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில், அதாவது சனி மற்றும் திங்கள்கிழமைகளில் அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினமே மாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் மொத்தம் 8 பெட்டிகளைக் கொண்டது.

மேலும், இந்த ரயில் பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் வடக்கு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதேநேரம், இதற்கான முன்பதிவு இன்று (டிச.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க:சபரிமலையில் என்ன நடக்கிறது..? அதற்கான தீர்வுதான் என்ன..?

Last Updated : Dec 14, 2023, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details