தமிழ்நாடு

tamil nadu

போர் வெறியும் பயங்கரவாத நடவடிக்கைகளும் எந்தவொரு பகைமைக்கும் தீர்வாகாது - திருமாவளவன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 10:50 PM IST

இஸ்ரேல் நாட்டுக்கும் - பாலஸ்தீன ஹமாஸ் குழுவினருக்கும் இடையிலான மக்கள் விரோதப் போரை நிறுத்துவதற்கு ஐ.நா பேரவை உடனே தலையிட வேண்டும். போர் வெறியும் பயங்கரவாத நடவடிக்கைகளும் எந்தவொரு பகைமைக்கும் தீர்வாகாது என்று எம்.பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

UN Council should take action to stop the war between Israel and Palestine Hamas MP Thirumavalavan demanded
திருமாவளவன்

சென்னை: இஸ்ரேல் நாட்டுக்கும் - பாலஸ்தீன ஹமாஸ் படைக்குழுவினருக்கும் இடையிலான போர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் அவரது X சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலுக்குள் ஹமாஸ் குழுவினர் நடத்திய திடீர் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததையடுத்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் இப்போது கடுமையான போரைத் தொடுத்துள்ளது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த போர் இன்னும் தீவிரமடையக்கூடிய ஆபத்தை சுட்டிக் காட்டுகிறது. எனினும், தற்போது வெடித்துள்ள கொடிய போருக்கு ஹமாஸ் என்னும் படைக்குழுவினர் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் அப்பாவி மக்கள் ஏராளமானோர் உயிரிழந்ததே உடனடிக் காரணமாகும்.

அதே வேளையில், ஹமாஸ் படைக்குழுவினரை எதிர்த்து இஸ்ரேல் தொடுத்துள்ள ஏவுகணை தாக்குதலிலும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போர் தங்களின் வலிமையை நிறுவுவதற்கான போர் வெறியாக இருதரப்பிலும் மாறியுள்ளதே தவிர, இதனால் அடிப்படையான சிக்கலுக்கு தீர்வு கிடைக்காது. மென்மேலும் பகை முற்றி வன்மம் தான் வலுவடையும். அப்பாவி பொதுமக்கள் தான் மென்மேலும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

எனவே, இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை அறிவித்து உடனடியாக பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். ஐநா பேரவை தலையிட்டு உடனடி போர்நிறுத்தத்தைக் கொண்டுவர வேண்டும். ரஷ்யா- உக்ரைன் போரின் காரணமாக உலக அளவில் மிகுந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதேபோல இப்போது நடந்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஹமாஸ் இடையிலான போர் அத்தகைய நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

குறிப்பாக, இந்தியா இஸ்ரேல் நாட்டோடு நெருக்கமான வர்த்தக உறவைப் பேணி வரும் நிலையில் இந்தப் போர் இந்திய பொருளாதாரத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் ஏற்படும் கடும் சுமையைத் தாங்க வேண்டியவர்கள் சாதாரண மக்கள்தான். இந்திய அரசு இதுவரை கடைபிடித்து வந்த ஒருசார்பற்ற நிலைபாட்டினைக் கைவிட்டு இஸ்ரேலுக்கு ஒரு சார்பாக ஆதரவைத் தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் பெருங் கவலையையும் அளிக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தில் இந்தியா எந்த நிலை எடுத்திருக்கிறதோ அதேபோன்ற நிலைபாட்டினை இப்பிரச்சினையிலும் மேற்கொண்டு அங்கே அமைதி ஏற்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சரை அவதூறாகப் பேசிய அதிமுக மாஜி எம்எல்ஏ மீது வழக்கு.. மன்னிப்புக் கேட்டதால் ஜாமீன் வழங்கிய நீதிபதி!

ABOUT THE AUTHOR

...view details