தமிழ்நாடு

tamil nadu

காரை டெலிவரி செய்யாமல் கடத்திய நபர்கள்.. ஆன்லைன் மூலம் மோசடி வலை..

By

Published : Jan 7, 2023, 12:29 PM IST

சென்னையில் இருந்து செகந்திராபாத்துக்கு காரை டெலிவரி செய்யாமல், கடத்தி வைத்து மிரட்டிய இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காரை டெலிவரி செய்யாமல் கடத்திய நபர்கள்
காரை டெலிவரி செய்யாமல் கடத்திய நபர்கள்

சென்னை:அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் மோகன் ஐயானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கார் ஒன்றை செகந்தராபாத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். இதன்படி கடந்த டிச.20ஆம் தேதி movemycar.in என்ற இணையதளத்தின் மூலம் காரை டெலிவரி செய்வதற்காக, ஆன்லைனில் தொடர்புடைய நிறுவனங்கள் குறித்து தேடி உள்ளார்.

இந்த நிலையில் கிருஷ்ணா மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ரோனக் என்பவர் மோகன் ஐயானியை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது 5,800 ரூபாய்க்கு காரை சென்னையில் இருந்து செகந்திராபாத் எடுத்துச் செல்ல ரோனக் முன் வந்ததால், அதற்கு மோகன் ஐயானி சம்மதித்துள்ளார்.

இதன்படி அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பிரவீன் சிங் என்பவர், சென்னை அயனாவரத்தில் இருந்து காரை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் காரை டெலிவரி செய்யவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மோகன் ஐயானி தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது காரை உரிய இடத்தில் கொண்டு செல்ல வேண்டுமென்றால் 80,000 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மோகன் ஐயானி, இதுகுறித்து கீழ்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து பெங்களூருக்குச் சென்றனர்.

அங்கு மோகன் ஐயானியின் காரை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் காரை எடுத்துச் சென்று மிரட்டிய நபர்கள் கார் வைத்திருக்கும் இடத்தில் இல்லாததால், மோகன் ஐயானியின் காரை எடுத்துச் செல்ல முடியாதபடி காரின் அமைப்பை காவல் துறையினர் மாற்றி அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் காரை எடுத்துச் சென்ற பிரவீன் சிங் காரை எடுக்க வந்துள்ளார். அப்போது கார் நகர முடியாமல் இருந்ததால், உடனடியாக பிரவீன் சிங்கை தனிப்படை காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் ரோனக் என்பவரையும் கைது செய்த காவல் துறையினர், இருவரையும் சென்னை அழைத்து வந்தனர்.

இதனையடுத்து காவல் துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இணையதளத்தின் மூலம் சேவைகளைப் பெறும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட சேவை அளிக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை அறிந்து பயன்படுத்தும்படி காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

movemycar.in என்ற இணையதளம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தை கொண்டு செல்வதற்கு உதவும் நிறுவனங்களை உள்ளடக்கிய இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஓசி பிரைட் ரைஸ் கேட்டு தகராறு.. கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய 5 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details