தமிழ்நாடு

tamil nadu

300 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சிலை திருட்டு; இருவர் கைது!

By

Published : Dec 24, 2022, 9:11 PM IST

பணத்திற்காக 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் சிலையை திருடி, கடத்த முயன்ற நபர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பழங்கால ஆஞ்சநேயர் சிலையை திருடிய இருவர் கைது
பழங்கால ஆஞ்சநேயர் சிலையை திருடிய இருவர் கைது

சென்னை: கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம் பகுதியில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயிலிலிருந்து 300 ஆண்டுகள் பழமையான ஆஞ்சனேயர் சிலை திருடப்பட்டு விட்டதாக பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் வழக்கில் முன்னேற்றம் காணப்படாத நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பதிவான கோயிலின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், அதில் பதிவான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி கும்பகோணம் பை-பாஸ் சாலையில் சிசிடிவி-யில் பதிவான சந்தேக நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் திருத்தணி தாழவேடு பகுதியைச் சேர்ந்த நீலகண்டன்(30), இவர் வீட்டில் சிறிய கோயிலை கட்டி அங்குள்ள பொதுமக்களுக்குக் குறி சொல்வதைச் செய்து வருகிறார். பல கோயில்கள் மற்றும் வீட்டிற்கு சென்று பூஜை செய்து வந்த நீலகண்டன், கடந்த 2019ஆம் ஆண்டு தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குப் பூஜைக்காகச் சென்ற போது, கோயிலில் பழங்கால ஆஞ்சனேயர் சிலையைப் பார்த்துள்ளார்.

நீலகண்டனின் கூட்டாளியான மணிகண்டன் பழங்கால ஆஞ்சனேயர் சிலையை வைத்திருந்தால் நன்மைகள் நடக்கும் எனவும், பல கோடி மதிப்புடையது என நீலகண்டனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ஆஞ்சனேயர் சிலையைத் திருடிய நீலகண்டன், பின்பு திருடிய சிலையைப் பல வீடுகளுக்கு எடுத்துச் சென்று பூஜை மற்றும் குறி கூறி சம்பாதித்து வந்துள்ளார்.

மிகப்பெரிய மடாதிபதியாக ஆக வேண்டும் என்ற ஆசையில் நீலகண்டன் ஆஞ்சனேயர் சிலையைத் திருடியதாக நீலகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் தனது கூட்டாளியான வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் நீலகண்டன் சேர்ந்து திருடிய சிலையை வெளிநாட்டிற்கு அனுப்பி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் நீலகண்டன் அளித்த தகவலின் அடிப்படையில், திருத்தணியில் உள்ள அவரது வீட்டிலிருந்து 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் அப்போது ஆட்சி செய்த நாயக்கர் மன்னர்களால் நிறுவப்பட்டதாக நம்பப்படும் 300 ஆண்டுகள் பழமையான ஆஞ்சனேயர் சிலையை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டனர்.

அதன் தொடர்ச்சியாக நீலகண்டன் அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளியான மணிகண்டனையும் வேலூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். திறமையாக புலனாய்வு செய்து 300 ஆண்டுகள் பழமையான சிலையைத் திருடிய குற்றவாளிகளைக் கைது செய்து சிலையையும் மீட்ட அதிகாரிகளுக்குத் தமிழக டி.ஜி.பி சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில் டிஜிட்டல் பதக்கங்கள் மற்றும் பண வெகுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Christmas Eve: தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details