தமிழ்நாடு

tamil nadu

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருப்பதே உயிரிழந்தோருக்கான உண்மையான அஞ்சலி - டிடிவி

By

Published : May 22, 2021, 11:03 AM IST

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருப்பதே, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோருக்கான உண்மையான அஞ்சலி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு, அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினம் இன்று (மே.22) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி வழங்கப்படவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கும் 3ஆம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்துகிறேன். அந்தக் கொடூர நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி வழங்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.

பொதுமக்கள் மீது போடப்பட்ட குறிப்பிட்ட சில வழக்குகளை அரசு திரும்பப் பெற்றிருப்பது மட்டும் போதாது; தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான முதன்மை வழக்கினை துரிதப்படுத்தி மனிதநேயமற்ற அச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் தமிழ்நாடு அரசு வழி காண வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த இடைக்கால அறிக்கையை வெளிப்படையாக மக்கள் பார்வைக்கு வைப்பதோடு, அந்த ஆணையம் விரைவாக தமது முழு விசாரணையையும் நடத்தி முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இழப்பீடுகள் வழங்கப்படுவது ஆறுதல் அளித்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி வழங்குவதும், எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருப்பதுமே அதில் கொல்லப்பட்ட 13 உயிர்களுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : 3ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

ABOUT THE AUTHOR

...view details