தமிழ்நாடு

tamil nadu

மறக்குமா நெஞ்சம்..! ஆழிப்பேரலையால் அதிர்ந்த தமிழகம்..! 19வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 5:30 AM IST

Tsunami Memorial Day: தமிழகத்தில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டு 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அதன் தாக்கம் இன்றளவும் ஆறாத வடுவாக மக்கள் மனதில் இருக்கும் நிலையில் இன்று சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு 19வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

today Tsunami 19th Memorial Day
சுனாமி நினைவு தினம்

சென்னை:தமிழகம் பல இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துள்ளது. ஓக்கி, தானே, நீலம், கஜா, வர்தா, மாண்டஸ், நிவர், நிஷா, மிக்ஜாம் என இந்தப் பேரிடர்களை எல்லாம் மக்கள் மறந்திருக்க முடியாது. ஆனால், இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் ருத்திர தாண்டவமாடிய புயலான, 1964ல் தனுஷ்கோடியில் வீசிய சூப்பர் புயலைக் கூட தமிழகம் சந்தித்து விட்டது.

ஆனால், 19 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி முடித்த பலரும், அடுத்த நாளின் விடியலின் போது நிகழ்ந்த மிகப் பெரிய துயரத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த 2004 டிசம்பர் 26-ஆம் தேதி, தமிழகம் மட்டுமின்றி பல நாடுகளில் ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கியது. அன்றிலிருந்து டிசம்பர் மாதம் என்றாலே, தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் மாதம் என மக்கள் மனத்தில் பதிந்துவிட்டது.

சென்னை நகரம் எப்பொழுதுமே, பல்வேறு இயற்கைப் பேரிடர்களையும், சில தாக்குதல்களையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில், முதலாம் உலகப் போர் தொடங்கி மிக்ஜாம் புயல் வரை சென்னை சந்தித்துவிட்டது. இதில், மக்களால் மறக்க முடியாத ஒன்று, 2004ஆம் ஆண்டு டிச.26ஆம் தேதி காலை 8 மணி அளவில் நடைபெற்ற கோரச் சம்பவம். வங்கக்கடலும், மெரினா கடற்கரையும் எப்போதும் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அழகிய நெய்தல் நிலம்.

இந்நிலத்தில் அலைகள் என்பது புதிதல்ல. ஆனால் அன்றைய தினம் நடந்ததே வேறு. டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாத்திற்கு பிறகு, மக்கள் அனைவரும் புத்தாண்டு கொண்டாத்திற்காக தயாராகிக் கொண்டிருந்த வேளையில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல் பகுதியில், அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குக் கீழே நிலத்தட்டுகள் சரிந்தன.

நிலநடுக்கத்தை அளக்கும் கருவியான சீஸ்மோகிராப் 8.3 முதல் 10 நிமிடங்கள் வரை நீடித்த நில நடுக்கங்களை இதற்கு முன்னர் எங்குமே பதிவு செய்ததில்லை. உலகின் 2-வது பெரிய அளவாக, ரிக்டர் அளவு மானியில் 9.1 முதல் 9.3 வரை இந்த நிலநடுக்கம் பதிவானது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்.

அதுபோல், இதன் எதிரொலியால், அமைதியான கடலில் அலைகளின் கீதத்தை மட்டுமே கேட்டறிந்த மக்கள், அலறலின் கீதத்தையும் கேட்டனர். அன்றைய தினத்தில் ஏற்பட்ட அலைகளின் கோரத் தாண்டவம் மக்களைப் பீதி அடையச் செய்தது. இதுவரை செவி வழியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆழிப்பேரலையின் ஆட்டத்தை அன்று மக்கள் சந்திக்க நேரிட்டது.

சுனாமி:"சுனாமி" என்ற ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு 'துறைமுக அலை' என்பது பொருள். தமிழில் கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை' எனவும் அழைக்கப்படுகிறது.
ஐம்பெரும் காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரத்தில்,

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" என்ற வரிகள், "கடல் சினந்து ஆழிப்பேரலை எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும், பல மலைகளையும், குமரிக் கோட்டையையும் மூழ்கடித்தது" என்னும் பொருளை உணர்த்துகிறது.

இதுபோன்று பரிபாடல், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் ஆழிப்பேரலை பற்றியும், கடற்கோள் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே, தமிழகத்திற்குச் சுனாமி புதிதல்ல என்பதை நாம் இப்பாடல்கள் மூலம் அறிந்தாலும், 2004ஆம் ஆண்டு டிச.26ஆம் நடைபெற்ற பேரழிவால், இலக்கியத்தின் வாயிலாக அறிந்ததை, கண்கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டது.

டிசம்பர் 26 நடந்தது என்ன?: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு முதலில் பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து, இதன் எதிரொலியால் வங்கக்கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும், எழும்பிய ஆழிப்பேரலைகள், இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழக மக்கள் மழை, வெள்ளம், வறட்சிஅகியவற்றை சந்தித்து வந்த நிலையில், அன்றைய தினத்தில் சுனாமியையும் சந்தித்தனர்.

பூகம்பத்தால் எழும்பிய கடல் அலைகள், மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குக் கொடூரத்துடன் பாய்ந்து, ஊருக்குள் வந்தன. சில நிமிடங்கள் நீடித்த கடல் கொந்தளிப்பு மிகப்பெரிய பேரழிவை இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்படுத்தியது. இதில் சுமார் 3 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இது உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் மிக முக்கிய இடத்தை பிடித்தது.

இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பலியாகினர். தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பலி என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் டிச.26ஆம் தேதி சுனாமியால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் விதமாக, உறவினர்கள் அவர்களுக்கு மலர் வளையம் வைத்தும், மெழுகுவத்தி ஏற்றியும் இந்த நாளை கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:திருநெல்வேலி வெள்ளத்தில் மொத்தம் 16 பேர் உயிரிழப்பு.. மாவட்ட நிர்வாகம் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details