தமிழ்நாடு

tamil nadu

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்.. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுவது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 3:30 PM IST

Smart Class: தமிழகத்தில் உள்ள 26,552 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Smart class class
ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவீன முறையிலான கல்வியை கற்பிக்கும் வகையில், ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்கவும், இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே அரசின் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. ஆனால், நடுநிலைப் பள்ளிகளில் இது போன்ற வசதிகள் இல்லாமல் இருந்தது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6,552 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அகன்ற திரையில் ஒலி-ஒளி அமைப்புகளோடு கூடிய, கற்றல் கற்பித்தல்களை மேற்கொள்வதற்கும், கற்றலில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நவீன வகுப்பறை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணிகள் வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன்னர் முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு கணினி:அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்களும் நவீன டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டும் என்பதற்காக, அனைத்து இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 34 ஆயிரத்து 853 இடைநிலை ஆசிரியர்கள், 18,496 பட்டதாரி ஆசிரியர்கள் என 53 ஆயிரத்து 349 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கையடக்க கணினி வழங்கப்பட இருக்கிறது. இவை இந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டு, வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாதம் 1,500 ரூபாய் கட்டணத்தில் பள்ளிகளில் இணையதள வசதியை வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், அடுத்த கட்டமாக கையடக்க கணினிகள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்த திட்டத்திற்கு மட்டுமே 81 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளது. தொடக்கக்கல்வித் துறையின் இந்த புதிய முயற்சிகள், கற்றல் கற்பித்தலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும், இதனால் மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதோடு, கூடுதலாக மாணவர் சேர்க்கை நடப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:போடியில் குப்பைக் கிடங்காக மாறி வரும் அரசு பயணியர் தங்கும் விடுதி!

ABOUT THE AUTHOR

...view details