தமிழ்நாடு

tamil nadu

சென்னை பல்கலை. துணைவேந்தர் மீது முறைகேடு புகார்.. விசாரணைக்கு அனுமதி கேட்டு ஆளுநருக்கு கடிதம்!

By

Published : Aug 7, 2023, 8:29 AM IST

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி மீது உள்ள முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அனுமதி கேட்டு, உயர்கல்வித்துறை சார்பில் ஆளுநருக்கு கடந்த மார்ச் மாதம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த ஆளுநரிடம் உயர் கல்வித் துறை கடந்த மார்ச் மாதம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து அனுமதி வழங்கப்படாமல் உள்ளதாக உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள கௌரி ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது துறை தலைவராக இருந்துள்ளார். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மீடியா சயின்ஸ் துறையின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சமயத்தில் தற்போது துணைவேந்தராக உள்ள கௌரி, விதிகளை மீறி செலவிட்டதாக தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், அதற்கான விளக்ககும் அவரால் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கௌரி பொறுப்பேற்ற பின்னர் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள கௌரி மீதான குற்றசாட்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை, பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்கின்ற முறையில் ஆளுநரிடம் அனுமதி கேட்டு அவரது தனி செயலாளருக்கு மார்ச் மாதம் கடிதம் அனுப்பி உள்ளது.

ஆளுநருக்கு கடிதம் அனுப்பி கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகியும் துணைவேந்தர் கௌரி மீதான புகார் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது என்று தற்போது புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா நேற்று (ஆகஸ்ட் 06) நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடதக்கது.

இது ஒருபக்கம் இருக்க, துணைவேந்தர் மீதான லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு அனுமதி கேட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட கடிதம் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், துணைவேந்தர் கௌரி மீது அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 17 ஏ வின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் பிறப்பிடமாக தமிழ்நாடு திகழ்கிறது’ - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புகழாரம்!

ABOUT THE AUTHOR

...view details