தமிழ்நாடு

tamil nadu

அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு.. மாற்று அட்டவணையை வெளியிட முதலமைச்சர் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 2:15 PM IST

Half yearly exam postponed: தமிழ்நாடு முழுவதும் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை, இம்மாதம் 13ஆம் தேதிக்கு தள்ளிவைக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள்
மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள்

சென்னை: தமிழகத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக நாளை (டிச.11) தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வின் தேதிகளை மாற்றி அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், "மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுரைகளின்படி, 'மிக்ஜாம்' புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, நாளை (டிச.11) பள்ளி திறக்க உள்ள நிலையில், நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவற்றைக் கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 லட்சம் ரூபாய் என மொத்தம் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க வேண்டிய தேவைகளை நாளை (டிச.11) கண்டறிந்து, மறுநாள் (டிச.12) அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அரையாண்டுத் தேர்வுகள் நாளை (டிச.11) தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்கவிருக்கும் தேர்வுகளை, புதன்கிழமை (டிச.13) அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தேதி மாற்றப்பட்ட அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட, பள்ளிக் கல்வித் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இன்று நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வு.. 3,359 பணியிடங்களுக்கு தூத்துக்குடியில் மட்டும் 9,068 பேர் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details