தமிழ்நாடு

tamil nadu

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்று சென்னை வந்தனர்!

By

Published : Jul 27, 2023, 12:22 PM IST

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்று சென்னை வந்தனர். அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு இன்று தாயகம் திரும்பிய மீனவர்கள்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு இன்று தாயகம் திரும்பிய மீனவர்கள்

சென்னை:இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று வாகனம் மூலம் சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், இந்த மாதம் ஜூலை 9ஆம் தேதி அதிகாலை கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் இரண்டு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அந்த நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி, தமிழ்நாட்டு மீனவர்கள் 15 பேரையும் கைது செய்தனர். அதோடு மீனவர்களின் படகுகள், வலைகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து மீனவர்களை படகுகளுடன் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்பு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், மீனவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதினார். இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் மீனவர்களை விடுவிப்பது சம்பந்தமாக பேசினர்.

அதன் பின்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் 15 தமிழ்நாட்டு மீனவர்களையும் விடுதலை செய்தது. மேலும் விடுவித்த மீனவர்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் பராமரிப்பில் ஒப்படைத்தது. அதன் பின்பு இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்களை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து மீனவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மீனவர்களுக்கு பாஸ்போர்ட், விசா ஏதும் இல்லாததால் அவர்கள் அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட் எனப்படும் அவசரகால பயண அனுமதியை இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் வழங்கியது. மேலும், 15 மீனவர்களும் விமானத்தில் சென்னை வருவதற்கான விமான டிக்கெட்டுகளையும் ஏற்பாடு செய்தனர்.

இந்த நடைமுறைகள் முடிந்த பின்பு, இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 15 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு அரசு சார்பில் மீனவர்களை வரவேற்றனர். பின்னர், தமிழ்நாடு அரசு தரப்பில் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வாகனத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை ராமேஸ்வரம் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:DMK Files 2: ‘ஆளுநரிடம் வழங்கிய தகரப்பெட்டி’.. உள்ளே இருந்தது என்ன? - பாஜக மாநிலத் துணைத் தலைவர் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details