தமிழ்நாடு

tamil nadu

அதிகனமழையால் ஸ்தம்பித்த தென்மாவட்டங்கள்; பணிகளை விரைந்து முடிக்க அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 3:42 PM IST

TN CM examined flood damage through video conferencing: தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பணிகளை விரைந்து முடிக்க அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு
பணிகளை விரைந்து முடிக்க அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (டிச.20) காலை சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்குச் சென்று, அங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, வெள்ள பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை கணொலி காட்சி மூலமாகச் சந்தித்து விசாரித்தார். முகாம்களில் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், வழங்கப்படும் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுடனும், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர், மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஆகியோருடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், மருத்துவ உதவிகளையும் குறைவின்றி செய்து கொடுக்க வேண்டும் என்றும், பேரிடர் மீட்புப் படையினர் சென்றடைய முடியாத நிலையில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களின் நிலை மற்றும் அவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது, “ஸ்ரீவைகுன்டம் பகுதிக்கு மீட்புப் படையினர் சென்றடைந்து துரிதமாகச் செயல்பட்டு பாதிக்கப்பட்டோரைப் பத்திரமாக மீட்டனர். மேலும், அந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தாமிரபரணி ஆறு, அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

எட்டயாபுரம் சாலையில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் நேரடியாக காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் உரையாடினார். முகாம்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இதுவரை மின்சாரம் வழங்கப்படாத இடங்களுக்கு, போர்க்கால அடிப்படையில் மின் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இதுவரை மொத்தம் 10 ஹெலிகாப்டர் மூலம் 27 டன் உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:வெள்ளத்தில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.. 3 நாட்களுக்குப் பிறகு மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details