தமிழ்நாடு

tamil nadu

"மாணவர்கள் ஆசிரியர்கள் வருகை மட்டுமே EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்படும்" - டிட்டோஜாக் அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 11:26 AM IST

TitoJack Organization Announcement: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அளித்த உறுதிமொழி படி 12 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை என டிட்டோஜாக் அமைப்பு தெரிவித்துள்ளது.

டிட்டோஜாக் அமைப்பின் அறிவிப்பு
டிட்டோஜாக் அமைப்பின் அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் பேரமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, "தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின், மாநில உயர்மட்டக்குழு கூட்டம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.சேகர் தலைமை ஏற்றார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் 30 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி அக்டோபர் 13 ஆம் தேதி சென்னையில் டி.பி.ஐ வளாகத்தில் மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்திட முடிவு செய்து அதற்குரிய பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில் அக்டோபர் 11 ஆம் தேதி பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 12 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்பேச்சுவார்த்தையில் 30 அம்சக்கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதிமொழி அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நல்லெண்ண நடவடிக்கையாக அக்.13 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சென்னை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தைப் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டமாக நடத்திட டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு முடிவு செய்தது. அதன்படி 13 ஆம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் டிட்டோஜாக் சார்பில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகிய இருவரும் கலந்துகொண்டு, கோரிக்கைகள் தொடர்பாக உறுதிமொழி அளித்தனர்.

இந்நிகழ்வானது தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேற்கண்டவாறு பேச்சுவார்த்தை நடைபெற்று 15 தினங்களுக்கு மேலாகிவிட்டது. எனினும் பேச்சுவார்த்தையில் ஏற்பு செய்யப்பட்ட 12 கோரிக்கைகளில் எந்த கோரிக்கை தொடர்பாகவும், தொடக்கக்கல்வித்துறை இதுவரை எவ்வித உத்தரவையும் வெளியிடவில்லை.

இது ஒட்டுமொத்த தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே இனியும் தாமதிக்காமல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகள் தொடர்பான உத்தரவுகளையும் விரைந்து வழங்கிட வேண்டும்.

டிட்டோஜாக் பேரமைப்பு சார்பில் 16.10.2023 முதல் ஆசிரியர் வருகைப்பதிவு, மாணவர் வருகைப்பதிவு ஆகிய பதிவேற்றங்கள் தவிர கற்பித்தல் பணியினைப் பாதிக்கும் பிற எவ்விதப் பதிவேற்றங்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில்லை என முடிவு செய்து அறிவித்திருந்தோம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் 1.11.2023 முதல் ஆசிரியர்கள் EMIS இணையதளப் பதிவேற்றும் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை அதற்கான ஆணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, பேச்சுவார்த்தையில் உறுதி அளிக்கப்பட்டபடி 1.11.2023 முதல் ஆசிரியர்கள், மாணவர் ஆசிரியர் வருகைப்பதிவு தவிர கற்பித்தல் பணியினைப் பாதிக்கும் பிற எவ்வித பதிவேற்றப் பணிகளையும் மேற்கொள்ளாமல் தங்களை விடுவித்துக்கொள்வது எனவும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர் மதிப்பீடு, தேர்வு உள்ளிட்ட இணையவழிப் பதிவேற்றங்களை மேற்கொள்வதில்லை எனவும் டிட்டோஜாக் பேரமைப்பு ஒருமனதாக முடிவுசெய்துள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:பேரணிக்கு அனுமதிக்கு வழங்காததால் காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சார்பில் அவமதிப்பு வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details