தமிழ்நாடு

tamil nadu

பிரபல பிரியாணி கடையின் பெயரைப் பயன்படுத்தி ஹோட்டல் நடத்த இடைக்கால தடை!

By

Published : Jun 30, 2023, 6:34 AM IST

“ஒரிஜினல் ஸ்டார் பிரியாணி” என்ற பெயரை பயன்படுத்தி ஹோட்டல் நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரிஜினல் ஸ்டார் பிரியாணி பெயரை பயன்படுத்தி ஹோட்டல் நடத்த இடைக்கால தடை
ஒரிஜினல் ஸ்டார் பிரியாணி பெயரை பயன்படுத்தி ஹோட்டல் நடத்த இடைக்கால தடை

சென்னை: உணவு என்பது வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதி. உயிர்வாழ உணவு உண்போர் பட்டியலை விட சுவைக்காக உண்போர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. தமிழ்நாட்டில்பல்வேறு வகையான உணவகங்கள், உணவுகள் இருந்தாலும் பிரியாணிக்கான தேடுதலும், அதற்கான ரசிகர்களும் அதிகம். மேலும், தமிழ்நாட்டின் பாரம்பரிய சுவையில் தயாரிக்கப்படும் பிரியாணிக்கு தனியான மதிப்பு உள்ளது.

சுவை, தரம் பொறுத்து கடைகளின் சிறப்பு தனித்தனியே அறியப்பட்டாலும், ஒரே பெயரில் பல்வேறு கடைகள் அனைத்து இடங்களிலும் இயங்கி வருவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இந்த நிலையில், ஆம்பூர் ஸ்டார் பிரியாணி ஹோட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் அனீஸ் அகமது என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “எனது கொள்ளு தாத்தா கடந்த 1890ஆம் ஆண்டு ‘ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ என்ற ஹோட்டல் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு அதை எனது தாத்தா உள்ளிட்ட பலர் நிர்வகித்து வந்தனர்.

தற்போது சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட ஊர்களில் 33 கிளைகளும் பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 10 கிளைகளும், ஐக்கிய அரபு அமீரகம் ஒரு கிளை என மொத்தம் 44 ஹோட்டல் நடத்தி வருகிறோம். 2023ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மேலும் 10 கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். எங்களின் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி நிறுவனத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும், நன்மதிப்பும் உள்ளது.

எங்கள் நிறுவனத்தின் பெயர் உள்ளிட்டவைகளை வணிக குறியீடாக பதிவு செய்துள்ளோம். இந்த நிலையில், வேலூர் மாவட்ட ஆம்பூரில் ‘ஒரிஜினல் ஸ்டார் பிரியாணி’ என்ற பெயரில் எங்களின் பெயர் மற்றும் வர்த்தக குறியீட்டை பயன்படுத்தி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. எங்களின் நிறுவனத்தின் மதிப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்து வகையில் வர்த்தக குறியீட்டை பயன்படுத்துவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும்” என கோரப்பட்டாது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.செளந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், கடந்த 2018ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை வைத்து புதிய ஹோட்டலை நடத்துவது வர்த்தக குறியீடு சட்டத்திற்கு எதிரானது என்றும், எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

மனுதரார் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஒரிஜினல் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில் ஹோட்டல் நடத்த இடைக்கால தடை விதிப்பதாகவும், மனு தொடர்பாக ஜூலை 12ஆம் தேதி பதில் அளிப்பதாகக் கூறி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க:Tomato price: வெயிலோடு விளையாடி, வெற்றித் தக்காளி பறித்த விவசாயி

ABOUT THE AUTHOR

...view details