தமிழ்நாடு

tamil nadu

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 10:55 AM IST

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

the-madras-high-court-opined-that-the-police-had-failed-in-their-duty
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கதது ஏன்? உயர்நீதிமன்றம்

சென்னை:சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல்துறை தனது கடமையை செய்ய தவறியதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்நிலையில், சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிராக திராவிட கொள்கை ஒழிப்பு மாநாடு நடத்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவில், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூட்டம் நடத்தி அதில் ஆவேசமாக பேசியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தற்போது திராவிடக் கொள்கையை ஒழிக்கக் கூட்டம் நடத்தி அதை எதிர்க்க அனுமதி கோரப்பட்டு உள்ளது.

பொது மக்கள் மத்தியில் அவதூறுகளை உருவாக்கும் வகையில் கருத்துகளை பரப்புவதற்கு நீதிமன்றங்கள் உதவுமென யாரும் எதிர்பார்க்க கூடாது. சனாதன தர்மத்தை ஒழிப்பதற்காக நடைபெற்ற கூட்டத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரும், அமைச்சர்களும் பங்கேற்றதற்கு எதிராக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு செய்யாதது, காவல்துறையின் கடமையை மீறிய செயலாகும் என்றார்.

திராவிட கருத்தியலுக்கு எதிராக கூட்டம் நடத்துவது அனைவரின் அடிப்படை உரிமை என மனுதாரரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த நாட்டில் எந்தவொரு நபருக்கும் பிளவுபடுத்தும் கருத்துக்களைப் பரப்புவதற்கும், எந்தவொரு கருத்தியலை ஒழிப்பதற்கும் ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு உரிமை இல்லை என்றார்.

பல்வேறுபட்ட சித்தாந்தங்களின் கலவைதான் இந்திய நாட்டின் அடையாளம் என்றும் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர், பேச்சின் ஆபத்தை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். சாதி, மதம், சித்தாந்தம் ஆகியவற்றின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துகளை பரப்புவதில் இருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மாறாக, போதையை ஒழிப்பதில் கவனம் செலுத்தலாம், உடல்நலம், ஊழல், தீண்டாமை மற்றும் பிற சமூக தீமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பானங்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக கவனம் செலுத்தலாம் என்று தெரிவித்தார். மேலும், திராவிட கொள்கை ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்கபட்டால், அது பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால், திராவிட கொள்கை ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:தரமில்லாத சாலை.. கைகளால் பெயர்த்தெடுத்த மக்கள்! அதிகாரிகள் 20% கமிஷன் வாங்குவதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details