தமிழ்நாடு

tamil nadu

"முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பதவியிறக்கம் செய்யக்கூடாது" - ராமதாஸ் வலியுறுத்தல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 9:20 AM IST

Post Graduate Teachers Demotion issue: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைப் பதவி இறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை எந்த வகையிலும் தமிழக அரசு நியாயப்படுத்த முடியாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Post Graduate Teachers Demotion issue
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைப் பதவி இறக்கம் செய்யக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 1,300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைப் பதவி இறக்கம் செய்யத் தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவீத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மூன்று நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். 1977ஆம் ஆண்டு வரை 11+1 என்ற அளவிலிருந்த மேல்நிலைக் கல்வி, 1978-ஆம் ஆண்டில் 10+2 என்ற அளவுக்கு மாற்றப்பட்டது. அப்போது தான் தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளுக்கும், 12-ஆம் வகுப்பு வரையிலான மேல்நிலைப் பள்ளிகளுக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களே தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் பணிமூப்பு அடிப்படையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படும் நிலையில், உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெறும் போது, அவர்கள் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்கப்படுவர். அண்மைக்காலம் வரை இவ்வழக்கம் நீடித்தது.

இந்த முறையை எதிர்த்து 2015-16ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது என்றும், பட்டதாரி ஆசிரியர்களில் மூத்தவரைத் தான் அப்பதவியில் நியமிக்க வேண்டும் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எப்போது முதல் செயல்படுத்த வேண்டும் என்பதில் தெளிவில்லை.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, அது வழங்கப்பட்டதிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அதனால், தமிழ்நாடு முழுவதும் உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 1300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அந்தப் பணிகளிலிருந்து நீக்கப்படவுள்ளனர்.

இது பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும். இதுவரை தலைமை ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் அதே பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றுவது அவர்களை உளவியல்ரீதியாக கடுமையாகப் பாதிக்கும். இது அவர்களின் கற்பித்தல் திறனிலும் எதிரொலிக்கும் என்பதாலும், இறுதியில் பாதிக்கப்படுவது மாணவர்களாகத் தான் இருப்பார்கள் என்பதாலும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

இதை மனதில் கொண்டு பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாமல் இந்த சிக்கலுக்குத் தீர்வு காண முடியும். அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் பல்வேறு காரணங்களால் 600-க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இப்போது பதவி இறக்கம் செய்யப்பட உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், அந்த இடங்களுக்கு நியமிக்கப்பட வாய்ப்புள்ள பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய பட்டியலைத் தயாரித்து கலந்தாய்வு மூலம் காலியிடங்களை நிரப்ப இயலும்.

சில இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெறும் வாய்ப்போ அல்லது வேறு பதவி உயர்வு பெறும் வாய்ப்போ இருந்தால் அங்கு கூடுதலாக ஒரு தலைமை ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கி, அந்த இடத்தில் தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர்களை அமர்த்தலாம்.

எனவே, பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பிரதிநிதிகளைத் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் அழைத்துப் பேசி இருதரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாமல் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும். அதன் மூலம் பள்ளிக்கல்வியில் குழப்பங்கள் ஏற்படாமல் அரசு தடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:Bangalore Bandh : பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்! தமிழக பேருந்துகள், வாகனங்கள் இயங்கவில்லை!

ABOUT THE AUTHOR

...view details