தமிழ்நாடு

tamil nadu

சபரிமலை சீசனால் அதிகரித்துள்ள சென்னை - கொச்சி விமான சேவைகள்!

By

Published : Nov 22, 2022, 9:30 PM IST

கேரள மாநிலம், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலர் விமானங்களில் பயணம் செய்வதால் சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

சபரிமலை சீசனால் அதிகரிக்கப்பட்டுள்ள சென்னை - கொச்சின் விமான சேவைகள்...!
சபரிமலை சீசனால் அதிகரிக்கப்பட்டுள்ள சென்னை - கொச்சின் விமான சேவைகள்...!

சென்னை:கொச்சி - சென்னை இடையே தற்போது நாள் ஒன்றுக்கு பத்து விமான சேவைகள் இயங்குகின்றன. அத்தோடு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டுக்குள் தேங்காய்களை வைத்து விமானத்தில் எடுத்து செல்லலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தற்போது பெருமளவு விமானங்களில் சபரிமலைக்கு பயணம் செய்கின்றனர். இதனால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கொச்சிக்கு நாள் ஒன்றுக்கு மூன்று விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

தற்போது ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் ஒரு நாளுக்கு 5 விமானங்கள் காலை 8:10, 11:00, மாலை 5:15, 5:40, இரவு 9:10 மணிக்கு சென்னையில் இருந்து கொச்சிக்கு செல்கின்றன. அதேபோல் கொச்சியில் இருந்து ஐந்து விமானங்கள் சென்னைக்கு வருகின்றன.

இதனால் சென்னை- கொச்சி-சென்னை இடையே ஒரு நாளுக்கு 10 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த அனைத்து விமானங்களிலும் ஐயப்ப பக்தர்கள் செல்கின்றனர். ஆனால் விமானங்களில் தேங்காய் எடுத்துச் செல்லக்கூடாது என்று விமானப்பாதுகாப்பு விதி உள்ளது. ஆனால், ஐயப்ப பக்தர்கள் தலையில் சுமந்து செல்லும் இருமுடிக்குள் இரண்டு தேங்காய்கள் இருக்கும்.

ஒரு தேங்காய் துவாரம் போட்டு, பசு நெய்யை அடைத்து வைத்திருப்பார்கள். இந்த தேங்காய்கள் கொண்டு செல்ல தடை இருந்ததால் ஐயப்ப பக்தர்கள் பலர் விமானங்களில் செல்லத் தயங்கினர். அதோடு இருமுடி கட்டி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு விமானங்களில் தேங்காய் எடுத்துச்செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஃபீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி எனப்படும் பிசிஏஎஸ் பிறப்பித்த உத்தரவில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டுக்குள் தேங்காய் வைத்து எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முறையான பாதுகாப்பு சோதனைகள் உட்பட்டு இந்த தேங்காய்களை எடுத்துச்செல்லலாம் என்றும், அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 20ஆம் தேதி வரையில் இது அனுமதிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது ஐயப்ப பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விமானங்களில் செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அண்ணாமலையையும் எதிர்ப்பேன் - நடிகை காயத்ரி ரகுராம்

ABOUT THE AUTHOR

...view details