தமிழ்நாடு

tamil nadu

ஜெய்பீம் சர்ச்சை: சூர்யாவிற்கு எதிராகப் போடப்பட்ட வழக்கு ரத்து!

By

Published : Aug 11, 2022, 3:47 PM IST

'ஜெய்பீம்' திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சி வெளியிட்டதாக நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெய்பீம் சர்ச்சை : சூர்யாவிற்கு எதிராக போடப்பட்ட வழக்கு ரத்து..!
ஜெய்பீம் சர்ச்சை : சூர்யாவிற்கு எதிராக போடப்பட்ட வழக்கு ரத்து..!

சென்னை:நடிகர் சூர்யா நடித்து, இயக்குநர் ஞானவேல் இயக்கிய ’ஜெய்பீம்’ படத்தில், வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில், அவர்களை இழிவுபடுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும், மகாலட்சுமியையும், அவர்கள் வணங்கும் குருவின் பெயரையும் இழிவுபடுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி,

தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவனத்தலைவர் சந்தோஷ் என்பவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8இல் அளித்தப்புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி காவல்துறையினர், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்குத் தடை விதிக்கவும் கோரி ’ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், இந்தப்புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக்கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details