தமிழ்நாடு

tamil nadu

“காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுகவும் பங்கேற்கும்” - தம்பிதுரை தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 7:22 PM IST

Thambi Durai: காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தொடரில் அதிமுகவும் பங்கேற்கும் என அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை

சென்னை:காவிரி விவகாரம் குறித்து மத்தியில் நடக்கவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தொடருக்கு புறப்பட்டுச் சென்ற அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கூறியதாவது, "இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அந்த நிகழ்வின் மூலம், அதிமுகவுடனான் பாஜக கூட்டணி சுமூகமாக செல்கிறது என தமிழ்நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.

மேலும், நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் டெல்லி வர உள்ளார். காவிரி விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மத்தியில் நடைபெற உள்ளது.

நடக்கவிருக்கும் காவிரி விவகாரம் தொடர்பான குழுவில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவில் அதிமுக சார்பில் நானும், நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரசேகரும் கலந்து கொள்ள இருக்கிறோம். விரைவில் காவிரி விவகாரத்திற்கு தீர்வு காணப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பிரதமரின் 73வது பிறந்தநாள்; 73 புதுமண தம்பதிகளுக்கு இலவச நாட்டு பசு வழங்கிய அண்ணாமலை!

தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்ற கூட்டத் தொடர் முக்கியமான நிகழ்வாக இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முலம் நாடாளுமன்றத்திற்கும், தமிழக சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் கூட்டணிகள் திராவிட இயக்கங்கள் தலைமையில்தான் இருந்துள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தலைமையில்தான் கூட்டணி நடைபெற்றது.

அதேபோல், தற்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க பாடுபடுவோம். எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. தேர்தலில் சுமூக முறையில் செயல்பட்டு வெற்றி பெற பாடுபடுவோம்" எனக் கூறினார்.

பின்னர் பிரதமர் மோடியின் பிறந்தநாள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், " நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுத்திடும் பிரதமர் மோடி, பல்லாண்டு காலம் வாழ்ந்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெறுவார். மேலும், இந்தியாவை பொருளாதாரம், வளர்ச்சி என அனைத்து வழிகளிலும் நல்வழிப்படுத்துவார். மேலும், பிரதமர் மோடி உலகத்தில் மாபெரும் தலைவராக வளர்ந்து வருவது இந்தியாவிற்கே பெருமை ஆகும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:PM Modi : பிரதமர் மோடி பிறந்த நாள் விழா.. நாடு முழுவதும் பாஜக ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details