தமிழ்நாடு

tamil nadu

"உழைப்பால் உயர்ந்த தலைவனுக்கு வீரவணக்கம்" - வேல்முருகன் நேரில் அஞ்சலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 11:00 AM IST

Updated : Dec 30, 2023, 1:53 PM IST

Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உருக்கமாக பேசி அஞ்சலி செலுத்தினார்.

T velmurugan emotional speech on Captain Vijayakanth
விஜயகாந்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அஞ்சலி

கேப்டன் விஜயகாந்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அஞ்சலி

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிச.28ஆம் தேதி காலை 6.10 மணியளவில் காலமானார். இவரின் உயிரிழப்பு நாடு முழுவதையும் பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. விஜயகாந்த மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், "தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழர்கள் வாழுகின்ற பல்வேறு நாடுகளில், இந்த திரைக்கலைஞனுக்கு, ஏழை எளிய மக்களின் உள்ளம் கவர்ந்த மாபெரும் மனிதநேய, மாந்தநேயப் பற்றாளருக்கு, உலக தமிழர்கள் ஒன்று கூடி தங்களது வீரவணக்கத்தைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கேப்டன் விஜயகாந்த் தேமுதிகவைத் துவங்கி, மிகப்பெரிய அளவில் வளர்ந்து வந்த தருணத்தில், நான் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய இணை பொதுச் செயலாளராக இருந்து, அரசியல் ரீதியாக பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை தேர்தல் களத்தில் அவருக்கு எதிராக மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று, சட்டப்பேரவைக்கு வந்தபோது, நான் அரசியல் ரீதியாக வைத்த அத்தனை கடுமையான விமர்சனங்களையும் புறந்தள்ளி, நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்தார்.

பின்னர் சட்டப்பேரவையுடைய நடவடிக்கைகளையும், குறிப்புகளையும் என்னிடத்தில் ஆவலோடு கேட்டு, என்னுடன் உரையாடிய அந்த தருணங்கள் என் கண்களில் நீர் வழிகிறது. வாழ்ந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான கலைஞர்களையும், தொண்டர்களையும் தன் அன்பால், பாசத்தால், நடிப்புத் திறமையினால் தன் பக்கம் ஈர்த்த ஒரு மகத்தான கலைஞன் கேப்டன் விஜயகாந்த்.

அவர் இன்று நம்முடன் இல்லை, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கண்ணீர் கடலிலே திரண்டு வந்து இறுதி மறியாதை செய்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தேமுதிக தொண்டர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன்.

விஜயகாந்த் என்கிற புரட்சி நடிகன், புரட்சி கலைஞன், அரசியல் களத்திலும் குறிப்பிட்ட காலத்தில் மாபெரும் புரட்சியை செய்து, தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக திகழ்ந்த அந்த மாமனிதருக்கு, உழைப்பால் உயர்ந்த அந்த தலைவனுக்கு வீரவணக்கம்" என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அவரது சமூகவலைதளமான X வலைத்தளத்தில், "தேமுதிக நிறுவனத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், புகழ்பெற்ற திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "மனிதநேயத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றிதான் இந்த கூட்டம்" - நடிகர் பார்த்திபன் புகழஞ்சலி!

Last Updated : Dec 30, 2023, 1:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details