தமிழ்நாடு

tamil nadu

VAO Request Gun: கடமையைச் செய்ய அச்சுறுத்தல்.. கைத்துப்பாக்கி வழங்க விஏஓ சங்கம் கோரிக்கை!

By

Published : May 2, 2023, 7:55 PM IST

மணல் கொள்ளையைத் தடுத்த தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்புக்காக தற்காப்புப் பயிற்சியுடன் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விஏஓ சங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:பணி செய்யும் நேர்மையான அதிகாரிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பிற்காக ஒரு தற்காப்பு பயிற்சி உடனடியாக அரசு வழங்கவும், தேவைப்படும்பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் தூத்துக்குடியில் கிராம அலுவலர் அலுவலகத்தில் பணியிலிருந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை (Tuticorin VAO Lourdes Francis murder) செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படுகொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் விஏஓ குடும்பத்திற்கு அறிவித்தபடி, ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், இதற்குக் காரணமான குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தங்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி கேட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி கேட்கும் VAO-க்கள்: இது குறித்து தமிழ்நாடு விஏஓ சங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் வைத்த கோரிக்கையில், ''தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளை சம்பந்தமாக நடைபெற்ற படுகொலை போன்றே மற்றொரு நிகழ்வாக, சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் உள்ள மானாத்தாள் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த வினோத்குமார், மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் வாகனத்தைப் பிடித்ததால் அதே பகுதியைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட நபர்கள் மேற்படி கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக் கொலை செய்யும் நோக்கத்தில் விரட்டிய சம்பவம் நடைபெற்றது.

தற்காப்பு பயிற்சியுடன் கைத்துப்பாக்கி: இதைப் போன்று நடைபெறும் சம்பவங்களால், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவரும் அச்சத்தோடும் பாதுகாப்பற்ற நிலை இருந்த போதிலும், நேர்மையாக பணி செய்து வருகிறார்கள்.

அவ்வாறு பணி செய்யும் நேர்மையான அதிகாரிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பிற்காக ஒரு தற்காப்புப் பயிற்சி உடனடியாக அரசு வழங்கவும், தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்கவும், அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், புகார் மனு அளித்தவுடன் காவல்துறை நடவடிக்கை எடுத்திடவும் தமிழக முதலமைச்சரையும், வருவாய்த்துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறோம்.

கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் வரும் பட்சத்தில் பாதுகாப்புக்கேட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோர்களிடம் மனு கொடுக்கும்பட்சத்தில் உடனடியாக, அதைப் பரிசீலனை செய்து அவர்களை பாதுகாக்க எமது சங்கம் சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

ஊருக்குள் விஏஓ அலுவலகம் அமைக்கவும்: தமிழ்நாட்டில் பெருமளவில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டடங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ அல்லது குடியிருப்புகள் அருகிலோ கட்டடம் கட்டிக் கொடுக்கவும், இவ்வலுவலகத்தில் சிசிடிவி (CCTV) பொருத்த உத்தரவிடுமாறும், குற்றவாளிகளின் பட்டியலை உளவுத்துறை மூலம் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்திடவும் வேண்டும்.

மேற்கண்ட கொலை சம்பவங்களால் பாதுகாப்பற்ற நிலை உள்ள நிலையில் தற்போது பணி கிராமங்களில் தங்குதல் வேண்டும் என்ற விதியை தளர்வு செய்யுமாறும்' தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:கத்தியுடன் விரட்டிய மணல் கடத்தல் கும்பல் - போலீசில் தஞ்சம் அடைந்த VAO!

ABOUT THE AUTHOR

...view details