தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு நெடுஞ்சாலை திட்டங்கள் - மத்திய அமைச்சருடன் ஏ.வ.வேலு சந்திப்பு

By

Published : Mar 18, 2022, 6:25 AM IST

செங்கல்பட்டு, திண்டிவனம் சாலையை, எட்டு வழித்தடமாக அகலப்படுத்த வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரிடம் தமிழ்நடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு தமிழ்நாடு நெடுஞ்சாலை திட்டங்களை நிறைவேற்ற ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை
பல்வேறு தமிழ்நாடு நெடுஞ்சாலை திட்டங்களை நிறைவேற்ற ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை

சென்னை:தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று(மார்ச் 16) புதுடெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு புதிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்தார்.

ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை

இந்தச் சந்திப்பின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும், நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்தும், அதை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு வழங்கிக் கொண்டிருக்கும் ஒத்துழைப்பு குறித்தும் விரிவாக விவாதித்தார்.

மேலும், குவாரிகளில் மண் எடுத்தல், வனத்துறையினரால் அனுமதி அளிக்கப்பட வேண்டிய திட்டங்கள், மின்வாரிய கம்பி வடங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றை மாற்றி அமைப்பதற்கான பணிகள், நீர்நிலைகளின் மீது கட்டப்பட வேண்டிய கட்டுமானங்களுக்குப் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையினால் அனுமதி வழங்குதல் போன்ற விவரங்களை ஒன்றிய அமைச்சருக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்கள்

தமிழ்நாட்டில், சில முக்கிய இடங்களில் அதிக போக்குவரத்துச் செறிவு உள்ளது என்பதை விளக்கிக் கூறிய அமைச்சர், சில நெடுஞ்சாலைத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஒன்றிய அமைச்சரிடம் விரிவாக விளக்கிக் கூறினார்.

* செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான சாலையினை, எட்டு வழித்தடமாக அகலப்படுத்துதல்.

* சென்னை-தடா சாலையில், மாதவரம் சந்திப்பு முதல் சென்னை வெளிவட்டச் சாலை வரை ஆறு வழித்தட உயர்மட்டச் சாலை அமைத்தல்.

* திருச்சி முதல் துவாக்குடி உயர்மட்டச் சாலை.

* தாம்பரம் முதல் செங்கல்பட்டு உயர்மட்டச் சாலை.

* வாலாஜாபாத் –பூந்தமல்லி சாலையில், மதுரவாயல் சந்திப்பு முதல் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி வரை ஆறு வழித்தட உயர்மட்டச் சாலை அமைத்தல்.

* கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை

* கோயமுத்தூர் நகரின் அரைவட்டச் சாலை.

* திருச்சிராப்பள்ளி நகரின் அரைவட்டச் சாலை.

* கொள்கை அளவில் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்ட 8 சாலைகளுக்கு உரிய அறிவிக்கையினை இந்திய அரசிதழில் வெளியிடுதல்.

* நகராட்சி எல்லைக்குள் இயங்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஐந்து சுங்கச் சாவடிகளை அகற்றுதல்.

ஆகிய இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றும், அதன் அவசியத்தையும், எடுத்துரைத்தார். இத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது, போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், விபத்துக்கள் நேராத நிலை ஏற்படும் என்றும், விளக்கிக் கூறினார். மேலும், ஒன்றிய அரசு உடனடியாக இப்புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:தவறு இழைத்த காவலர்களுக்கு ஆதரவாகப்பேசிய மதிமுக நிர்வாகி - வைகோவின் நடவடிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details