தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு பட்ஜெட்: 'ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும்'

By

Published : Aug 13, 2021, 8:57 PM IST

இந்தியாவின் முதல் “ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்” தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட்

சென்னை: சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலுள்ள மண்டபத்தில் இன்று (ஆக.13) காலை தமிழ்நாட்டின் வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்றது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் முதல் காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்

தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப் பரப்பில் 33 விழுக்காடு உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது.

தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், பல்வேறு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், மக்களின் முழுஅளவிலான பங்களிப்புடனும், பலதரப்பட்ட நம் மண்சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடும் திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும்.

சர்வதேச நீலக் கொடி சான்றிதழ்

பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக, முதலமைச்சரின் தலைமையின் கீழ், அரசு மொத்தம் 500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்றினை அமைக்கும்.

ஆளில்லா விமானங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் மேலாண்மை அமைப்புகள் (MIS), நவீன ஆயுதங்கள் மற்றும் வன நிலப்பரப்பிற்கேற்ற வாகனங்கள் உள்ளிட்ட நவீன கருவிகளுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில், சர்வதேச நீலக் கொடி சான்றிதழை (Blue Flag Certificate) பெறுவதற்காக, உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

இந்தியாவின் முதல் “ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்” ஒன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்படும். தமிழ்நாட்டிலுள்ள ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்தவும், அதன் இயற்கை சூழலை மீளுருவாக்கவும், “தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்” ஒன்றினை அரசு ஏற்படுத்தும்.

இந்த இயக்கம் ஐந்து ஆண்டுகளில் 100 ஈர நிலங்களை கண்டறிந்து, அவற்றின் இயற்கை சூழலை மீள உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளும். இதனால் அவற்றை சார்ந்தோரின் வாழ்வாதாரம் உயரும். இதற்கென 150 கோடி ரூபாய் நிதி ஐந்தாண்டுகளுக்கு செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு இ- பட்ஜெட்: 'தீயணைப்புச் சேவை சட்டம் மாற்றியமைக்கப்படும்'

ABOUT THE AUTHOR

...view details