தமிழ்நாடு

tamil nadu

"குழந்தைகளுக்கு எதிரான குற்றம் புரிவோர் மனித குலத்திற்கு அவமானம்" - விருதாச்சலம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

By

Published : Apr 12, 2023, 2:22 PM IST

விருத்தாச்சலம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கு அவமான சின்னம் என்றும், இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் எந்த விதமான பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

CM Stalin
விருத்தாச்சலம்

சென்னை: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் சிக்கிய திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் திமுகவிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த நிலையில், விருத்தாசலம் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று(ஏப்.12) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவி வீட்டிற்கு சென்ற பின் தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சிறுமி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், அப்பள்ளியின் தாளாளரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டுள்ளேன். குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி விருத்தாசலம் நகர் மன்றத்தின் 30-வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனே அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ரத்து செய்யப்பட்டு கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களும் உரிய விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரசை பொருத்தவரை செய்தி கேள்விப்படவில்லை, தொலைக்காட்சி மூலமாகத்தான் பார்த்தேன் என கூற தயாராக இல்லை. செய்தி அறிந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உடனடியாக கைது செய்து அதற்கு பிறகு சொல்ல வேண்டும் என தகவல் அளித்திருந்தேன்.

குற்ற செயலில் ஈடுபடுவோர் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கு அவமான சின்னம் என கருதுகிறோம். அந்த வகையில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் துரிதமாக எடுப்போம்" என்றார்.

முன்னதாக விருத்தாசலம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பள்ளித் தாளாளரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "குற்றஞ்சாட்டப்பட்ட பக்கிரிசாமி புகார் கொடுக்கப்பட்டு 12 மணி நேரத்திற்குப் பிறகுதான் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போதுமான நடவடிக்கை இல்லை. மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்த பக்கிரிசாமியை உடனடியாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தருவதன் மூலமாகவும், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகவும் இத்தகைய நிகழ்வுகள் இனியும் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் கைது!

ABOUT THE AUTHOR

...view details