தமிழ்நாடு

tamil nadu

Coromandel Express: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

By

Published : Jun 3, 2023, 11:15 AM IST

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும், 900 பேர் வரையில் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்தஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்தோடு, ஒடிசா மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து மீட்புப்ணிகள் குறித்து கேட்டறிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து குறித்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுப்பாடு அறையில் ஆய்வு செய்த பின்னர், சென்னை சேப்பாக்கம் எழிலகம் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயங்கர விபத்துக்குள்ளாகி 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக செய்தி வந்திருப்பதாகவும், இது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் வருந்தினார்.

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும், இரவே ஒடிசா மாநிலத்தின்முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அங்கு மீட்புப் பணிகள் ஏதேனும் தேவைப்பட்டால் தமிழ்நாட்டிலிருந்து உதவ தயாரக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறினார்.

தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், வருவாய்த்துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் காவல் துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் என பலர் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்த ஒடிசா ரயில் விபத்து குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க அமைக்கப்பட்டுள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்துள்ளதாக பேசிய அவர், விபத்தில் சிக்கி தமிழ்நாடு வந்து சேரக்கூடியவர்களை அழைத்து வர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான மருத்துவ வசதிகளும் செய்ய தயார் செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் காணொளி வாயிலாக ஒடிசா மாநில தலைமைச் செயலாளருடன் தற்போது கேட்டறிந்துள்ளதாகவும் கூறினார். ஒடிசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பயங்கர விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியின் நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த ரயில் விபத்து காரணமாக கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுள்ளது. மேலும், குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணி நேரமாவது இன்னும் மீட்பு பணிகள் நடைபெறும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Coromandel Express accident: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க அனுசரிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details