தமிழ்நாடு

tamil nadu

மிக்ஜாம் புயல் பாதிப்பு - ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அறிவிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 4:32 PM IST

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 6 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கவும், இதர நிவாரண உதவித் தொகைகளை நியாய விலை கடைகள் மூலம் வழங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை :தலைமைச் செயலகத்தில் வெள்ளம் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள், நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச. 9) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை, அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை 4 லட்ச ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 5 ஆயிரம் ரூபாயை, 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து, 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 18 ஆயிரம் ரூபாயில் இருந்து, 22 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார்.

மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 410 ரூபாயில் இருந்து, 8 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30 ஆயிரம் ரூபாயில் இருந்து 37 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுமென முதலமைச்சர் ஆணையிட்டு உள்ளார். சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட) 32 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 லட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :வேளச்சேரியில் தொடரும் மீட்புப் பணி.. மேலும் ஒருவர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டரா?

ABOUT THE AUTHOR

...view details