தமிழ்நாடு

tamil nadu

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு: மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு அமைக்கும் பணி தீவிரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 9:27 PM IST

Dengue fever in TN: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டு அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு
தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணியானது தீவிரமாகி உள்ளது. தமிழகத்தில் செப்டமபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை 300 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தென்காசி, திருவள்ளூர் உள்ளிட்ட 45 சுகாதார மாவட்டங்களில், 25-க்கும் மேற்பட்ட சுகாதார மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் கண்கானிப்பு தீவிரப்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் நிபா வைரஸ் சிகிச்சைகளுக்கு தனித்தனி வார்டுகள் ஏற்படுத்தி, சிகிச்சை அளிக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், டெங்குக்கான சிறப்பு வார்டு அமைக்கும் பணி தீவிரமாகி உள்ளது. இதனையொட்டி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், டெங்கு சிறப்பு வார்டில், படுக்கை வசதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணிகள் இன்று (செப்.15) தொடங்கியது. மேலும், தமிழகத்தில் ஆங்காங்கே மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது சுகாதாரத்துறை.

ஆய்வுக்கூட்டம்:தமிழக சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கற்க உள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டது. அதில், "டெங்கு காய்ச்சல் கண்டறியப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள், கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த இரு மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

மேலும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு, காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் நிபா வைரஸ் பாதிப்புக்கு தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தஞ்சையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு லேட் என்ட்ரி கொடுத்த அமைச்சர்: நிகழ்ச்சியில் தூங்கிய மகளிர் பயனாளிகள்!

ABOUT THE AUTHOR

...view details