தமிழ்நாடு

tamil nadu

சென்னை - திருப்பதி இடையே 6 ரயில்கள் 15 நாட்களுக்கு ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்புக்கான காரணம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 3:55 PM IST

Chennai to Tirupati Train Cancel: சென்னை- திருப்பதி - சென்னை மார்க்கத்தில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை இயக்கப்படும் ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் திருப்பதி செல்லும் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Chennai to Tirupati to Chennai trains cancelled for 15 days Southern Railway announced
ரயில்கள் ரத்தால் பயணிகள் அதிருப்தி

சென்னை:திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆந்திர மாநிலம் மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவதுண்டு. மேலும், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தமிழகத்தில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு நாள்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தினந்தோறும் பக்தர்கள் திருப்பதிக்கு பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள ஒரு அறிவிப்பு சென்னையில் இருந்து திருப்பதி செல்ல திட்டமிட்டிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 12-ஆம் தேதி வரை சென்னை - திருப்பதி - சென்னை ரயில்கள் 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. ரேணிகுண்டா பகுதியில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் இந்த ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.25 மணிக்கு திருப்பதி செல்லும் வண்டி எண் 16057, செ.28 முதல் அக்.12 வரை 15 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
  • அதேபோல் திருப்பதியில் இருந்து மறுமார்கத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் வண்டி எண் 16054, செப்.28 முதல் அக்.12 வரை 15 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
  • சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 14.15 மணிக்கு திருப்பதி செல்லும் வண்டி எண் 16053, செப்.28 முதல் அக்.12 வரை 15 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
  • மறுமார்கத்தில் திருப்பதியில் இருந்து 18.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் வண்டி எண் 16058, செப். 28 முதல் அக்.12 வரை 15 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
  • திருப்பதியில் இருந்து 6.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி புறப்படும் வண்டி எண் 16204, செப்.28 முதல் அக்.12 வரை 15 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 16.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் வண்டி எண் 16203, செப்.28 முதல் அக்.12 வரை 15 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு, ரேணிகுண்டா பகுதியில் நடைபெறும் ரயில் தண்டவாள பணிக்காக சென்னை - திருப்பதி - சென்னை இடையிலான 6 ரயில்கள் 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவது குறித்து தெற்கு ரயில்வே அத்ன் அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது. பிரம்மோற்சவ விழா காலத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படுவது தரிசணத்திற்கு செல்லும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வாகமன் கண்ணாடி பாலத்தை காண குவியும் சுற்றுலா பயணிகள்.. கிறங்கடிக்கும் நுழைவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details