தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமையவுள்ளது

By

Published : Oct 12, 2022, 3:25 PM IST

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அமைக்கப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழ்நாட்டின் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மொத்தம் 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக “கடவூர் தேவாங்கு சரணாலயம்” அமைக்கப்பட உள்ளது. இந்த சரணாலயத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஒப்புதல் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தது. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன.

இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், (IUCN) தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுத்தல்களைத் தணித்தல் ஆகியவற்றின் மூலமே இவைகளின் எண்ணிக்கையைப் பெருக்க இயலும். அழிந்து வரும் இந்த தேவாங்குகள் இனத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது.

கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இனத்தை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அரசு, இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.

மேற்படி அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 (மத்திய சட்டம் 53-ன் 1972) பிரிவு 26(A) (1) (1)ன் கீழ் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11ஆயிரத்து 806.56 ஹெக்டேர் (ஏழு பிளாக்குகளில்) பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக “கடவூர் தேவாங்கு சரணாலயம்” அமைத்து தமிழ்நாடு அரசு இன்று அறிவிக்கை செய்துள்ளது.

வன உயிரினங்கள் பாதுகாப்பில், குறிப்பாக அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாப்பதற்காக முதலமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அவற்றுள் சில;

  • பாக் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகத்தை அறிவிக்கை செய்தது
  • விழுப்புரம் மாவட்டத்தில் கழுவேலி பறவைகள் சரணாலயத்தை அறிவிக்கை செய்தது
  • அகத்தியர் மலை யானைகள் பாதுகாப்பகம் அறிவிக்கை செய்தது
  • திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தை அறிவிக்கை செய்தது
  • பதிமூன்று ஈர நிலப்பகுதிகளை ராம்சார் சாசனப் பகுதிகள் பட்டியலில் இடம் பெற்றமை.

மிகக் குறுகிய 15 மாத காலத்தில் எடுக்கப்பட்ட இந்த புதுமையான முயற்சிகள் வன உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகளில், தமிழ்நாட்டுக்கு ஒரு உன்னத இடத்தை அளித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க, திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details