தமிழ்நாடு

tamil nadu

உதயநிதியை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டியிட்டால் ஆதரிப்போம்- சீமான் அதிரடி

By

Published : Nov 29, 2022, 11:04 PM IST

உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சி, சவுக்கு சங்கரை ஆதரிக்கும்; அந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் அதிரடி
சீமான் அதிரடி

சென்னை: நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இன்று (நவ.29) சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த்து பேசிய சீமான், 'நீதிபதிகள் விண்ணுலகில் இருந்து வந்த தேவதூதர்கள் இல்லை எனவும் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் எவரையும் மக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வர் எனக் கூறினார்.

கருத்து சுதந்திரம் தவறில்லை:நீதிபதிகளை விமர்சித்ததால் சிறையில் அடைக்கப்பட்ட சங்கர், தற்பொழுது ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் சிறையில் இருந்தபோது தனக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சீமானை சந்தித்தார். தொடர்ந்து பேசிய சீமான், அண்ணன் தம்பி சந்திப்பு இது. சவுக்கு மீதான வழக்கு எனக்கு தனிப்பட்ட வெறுப்பு. கருத்து சுதந்திரம் குறித்த வால்டேர் கருத்தை எல்லாம் பேசியவர்கள், இன்று கருத்து சுதந்திரத்தை தடுக்கிறார்கள். அநீதியை எதிர்த்து பேசியது எப்படி தவறாகும்.

முக்கியத்துவம் கட்சிகளின் வழக்கிற்கு மட்டுமா?:நீதிமன்றத்தை பற்றி குருமூர்த்தியை விடவா.. அதிகமாக சவுக்கு சங்கர் பேசிவிட்டார். நீதிபதிகள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா? மக்கள் பணத்தில் ஊதியம் பெற்றாலே அவர்களை மக்கள் கேள்வி கேட்பது இயல்புதான். நீதிபதிகள் விண்ணுலகில் இருந்து இறக்கையுடன் வந்த தேவதூதர்கள் அல்ல! என சாடினார். எளிய மக்கள் வழக்கு எவ்வளவு காலதாமதம் செய்யப்படுகிறது. கட்சி சின்னம் வழக்கு விரைந்து விசாரிக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் இல்லை, தீர்ப்பு மன்றங்கள்தான் இருக்கிறது.

விமர்சனமும் ஒருவித பாராட்டுதான்:"விமர்சனத்தை ஏற்க முடியாதவர்கள் பதவிகளுக்கு வரக்கூடாது; விமர்சனமும் ஒருவித பாராட்டுதான். என் தம்பி சங்கர் என்னை விமர்சிப்பது எனக்கு பெருமைதான். எனக்கு அவர் மீது கோபம் இல்லை. விமர்சனத்தை தாங்காதவன், விரும்பியதை அடைய முடியாது" என்றார்.

உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டால் ஆதரிப்போம்! - சீமான் அதிரடி

சவுக்கு சங்கர் பின்னால் சீமான்!:சவுக்கு சங்கரை வேலையை விட்டு தூக்கிவிட்டனர். இனி அவர் என்ன செய்வார்? எனத் தெரிவித்த அவர், அவரின் பின்னால் இயக்கம் இல்லை. ஆனால், நான் சங்கர் பின்னால் இருக்கின்றேன். எனக்கு பின்னால் பெரிய இயக்கம் இருக்கிறது. தமிழ் சமூகம் சவுக்கு சங்கர் பின்னால் இருக்கிறது எனத் தெரிவித்தார்.

G square பற்றி பேசினால் என்ன?:நான் சிறு மீனாக இருந்து பேசியபோது, என்னை கைது செய்தனர். இப்போது வலையை அறுத்தெரியும் பெருத்த மீன் ஆகிவிட்டேன். தமிழ்நாடு முழுவதும் 125 வழக்குகள் என் மீது இருக்கிறது. துப்பாக்கி குண்டுக்கு நெஞ்சு காட்டிய பரம்பரை நாங்கள். சவுக்கு சங்கர் நீதிமன்றம் குறித்து பேசியது பிரச்சனையல்ல. G square பற்றி பேசியதுதான் பிரச்சனை. என் ஆட்டோகிராப்பை அரசு அதிகம் விரும்பும். அதுபோல, சங்கர் ஆட்டோ கிராப்பையும் இப்போது விரும்புகிறது.

விவசாயி சின்னத்தில் போட்டி: பிறந்தநாள் வந்தாதான் உதயநிதி நலத்திட்ட உதவிகளை செய்கிறார். உதயநிதியை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டியிட்டால், நான் அந்த தொகுதியில், எனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தாமல் சங்கரை ஆதரிப்பேன். அவர் விரும்பினால் 'விவசாயி' சின்னத்திலும் போட்டியிடலாம் என்று கூறினார்.

வெள்ளை குடையில் மு.க.ஸ்டாலின்:நாட்டை ஆள தகுதியற்றவர் முதலமைச்சராக நாடாளுகிறார். அவர் தன்னை விமர்சிக்க தகுதி வேண்டும் என்று கூறுவது தவறு. வரி செலுத்தும் அனைவரும் கேள்வி கேட்பர். பாஜக ஆள் நான் இல்லை. மு.க.ஸ்டாலின்தான் பாஜக ஆள். மோடி முன்பு, கருப்பு குடை பிடிக்க துணிவு இல்லாமல் வெள்ளை குடை பிடித்தவர்கள் இவர்கள்.

மோடிக்கு பாதுகாப்பு! நீங்களே அளித்திருக்கலாம்:தமிழ்நாடு வந்த மோடியின் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக அண்ணாமலை கூறியிருக்கிறார். அவர்தான் பெரிய ஐபிஎஸ் அதிகாரியாச்சே.. பிரதமருக்கு அவரே பாதுகாப்பு கொடுத்திருக்கலாமே! சும்மா எதையாவது பேசுகிறார். பாதுகாப்பு சரியாகத்தான் கொடுத்திருக்கப்படும்.

அண்ணாமலைக்கு வேறு வேலையில்லை. எனவே, குறை சொல்கிறார். பர்னாலா சிங்கமாக இருந்தார். அதனால், பஞ்சாப் சிங்கம் என்றார் கருணாநிதி. இப்போது ஆளுநர் அசிங்கமாக இருக்கிறார் என்றார். என்னை விமர்சித்தவர்கள் இன்று என்னை ஆதரிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள், சரியானது வென்றே தீரும்.

மூச்சை நிறுத்தலாம்..பேச்சை!: எந்த சூழலிலும் பேசுவதை நிறுத்தவேண்டாம் என்று சங்கரிடம் கூறினேன். மூச்சை நிறுத்தலாம்.. பேச்சை நிறுத்தக்கூடாது. திமுகவில் ராஜீவ்காந்திக்கு மாணவர் அணி தலைவர் பதவி கிடைத்ததில் எனக்கு பெருமை, மகிழ்ச்சி. பிரசன்னாவிற்கு கிடைக்காத பதவி, ராஜீவ்காந்திக்கு என் மூலம் கிடைத்துள்ளது. எங்கிருந்தாலும் தம்பி மகிழ்ச்சியாக இருக்கட்டும் எனத் தெரிவித்தார்.

இனியும் சீமானை விமர்சிக்கலாமா!:தொடர்ந்து சவுக்கு சங்கர் பேசுகையில், "தொடர்ந்து யாருக்கும் பயப்படாமல் பேச வேண்டும் என சீமான் தெரிவித்தார். நான் பயந்தால், பேச வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் பதற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. யாருமே எதிர்த்து பேசக்கூடாது என நினைக்கின்றனர். வரும்காலத்தில் சீமானை விமர்சித்து பேசினாலும், பரவாயில்லை.. பேசுங்கள்.. என சீமானே இப்போது என்னிடம் தெரிவித்தார்" என்றார்.

இதையும் படிங்க:தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு - சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details