தமிழ்நாடு

tamil nadu

6வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்.. எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 8:40 AM IST

Teachers Strike: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் 'எண்ணும் எழுத்தும் பயிற்சியை' புறக்கணிக்க இடைநிலை ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

எண்ணும் எழுத்தும் பயிற்சி புறக்கணிப்பு..இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள்!
எண்ணும் எழுத்தும் பயிற்சி புறக்கணிப்பு..இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள்!

சென்னை:இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் இன்று 6வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முதல் பருவத் தேர்வு முடிந்து இரண்டாம் பருவத்திற்கு 'எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு' இன்று (அக் 3) முதல் 8ஆம் தேதி வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சிக்கு செல்லாத ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என தொடக்க கல்வித்துறை இயக்குநரகம் அறிவுறித்தியுள்ளது. இந்த நிலையில், இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், போராட்ட களத்திற்கு வர முடியாத ஆசிரியர்கள், இன்று முதல் நடைபெற உள்ள எண்ணும் எழுத்தும் திட்டப் பயிற்சியை புறக்கணிக்க வேண்டும் எனவும், போராட்ட களத்திற்கு வராத ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கார்லா உஷா உடன் இரண்டு முறையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, களத்தில் போராட்டத்தில் இருந்த ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தி பிறந்தநாளான நேற்று இரவு, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் எனவும், முதல்வர் அறிவித்தால் உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்குச் செல்வோம் எனவும் கூறுகின்றனர். போராட்டத்தில் 5ஆம் நாளான நேற்று இரவு 10 மணி வரை பெண் ஆசிரியைகள் 113 பேர், ஆண் ஆசிரியர்கள் 102 பேர் மருத்துவமனையிலும், களத்திலேயே 22 பேர் என 237 பேர் மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், “ஏற்கனவே 14 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி காலதாமதம் செய்வது ஏற்புடையது அல்ல என்பதால், எங்களுடைய இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

அதனால் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பயிற்சிக்கு ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்திடவும் கேட்டுக் கொள்கிறோம். இதற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் உள்ள ஆசிரியர்களும், களத்தில் இல்லாமல் சூழ்நிலையால் வர முடியாத ஆசிரியர்களும் முழுவதுமான ஆதரவை அளிக்க வேண்டும்.

இடைநிலை இனம் அழிந்து கொண்டிருப்பதை நன்கு உணர்ந்த எம்மின தோழமை மூத்த ஆசிரியர் சங்கங்களும், இன உணர்வோடுள்ள ஆசிரியர்களும் இந்த போராட்டத்திற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:காந்தியும் தஞ்சையும் - சுவாரஸ்யம் பகிர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்!

ABOUT THE AUTHOR

...view details