தமிழ்நாடு

tamil nadu

4 மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் இல்லாமல் இருக்கும் பள்ளிகள் நாளை (டிச.11) திறக்கப்படும் - அமைச்சர் பேட்டி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 4:01 PM IST

School Education Minister Anbil Mahesh Byte: 4 மாவட்டங்களில் மாணவர்களின் புத்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்பொழுது வைக்கலாம் என்பது குறித்து முதலமைச்சரின் அலுவலகம் அறிவிப்பை வெளியிடும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை:சென்னை அரும்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய சென்னை எம்.பி தயாநிதிமாறன், மாவட்டச் செயலாளர் சிற்றரசு உள்ளிட்டோர் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, “வில்லிவாக்கம் மற்றும் அம்பத்தூர் தொகுதியில் கடந்த ஆறு நாட்களாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து தண்ணீர் சேராத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தண்ணீரை அகற்றிய பின்னர் அங்குள்ள குப்பைகளை அகற்றி குளோரின் பொடி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதே நேரத்தில் திமுக ஏற்பாட்டில் மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறோம். புயல் பாதிப்பிற்குப் பின்னர் நாளை (டிச.11) முதல் பள்ளியில் திறக்க உள்ளதால் பள்ளிகளை நேரடியாகச் சென்று, பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் எந்த அளவு தண்ணீர் தேங்கியுள்ளது?, வகுப்பறையில் தண்ணீர் தேங்கி உள்ளதா?, தண்ணீர் வடிந்து விட்டதா?, மின்சார சாதனங்கள் ஈரமின்றி பயன்படுத்தும் நிலையில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்தோம்.

மேலும் பள்ளிக் கல்வித்துறை வழங்கி உள்ள அறிவுரையின் படி பள்ளிகள் தயார் நிலையில் உள்ளதா?, பெண்கள் பள்ளியில் உள்ள கழிவறைகள் சுத்தமாக உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்துள்ளோம். நான்கு மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் நனைந்துள்ளதால் அவர்கள் தங்களைத் தேர்வு தயார்ப்படுத்திக் கொள்ள முடியுமா என்பது குறித்து இன்று (டிச.10) காலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.

மேலும் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் ஆசிரியர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி நாளை அவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது வழங்கப்படும். (பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் நாளை மறுநாள் டிசம்பர் 12 ஆம் தேதி வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது).

புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மாணவர்களின் புத்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்பொழுது வைக்கலாம் என்பது குறித்த தகவல் முதலமைச்சரின் அலுவலகத்திற்குத் தெரிவித்துள்ளோம். அது குறித்து ஆய்வு செய்து விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்கள். அதன்படி தேர்வு நடத்தப்படும். பாதிக்கப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து ஏற்கனவே பட்டியல் தயார் செய்து உள்ளோம்.

மேலும், 6 பள்ளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுத் திறக்க முடியாத நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆகவே தயார் நிலையில் உள்ள பள்ளிகளே நாளை திறக்கப்படும்” என தெரிவித்தார். அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, செனாய் நகர் மெட்ரோ இரயில் நிலையம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி போன்ற பள்ளிகளை நேரில் ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களுக்கு எவ்வித தொற்றுகளும் ஏற்படாத வகையில் தேவையெனில் சிறப்பு மருத்துவச் சிகிச்சை முகாம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ரூ.4,000 கோடிக்கான வெள்ளை அறிக்கை வேண்டும்.. அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்களின் அதிருப்தியான கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details