தமிழ்நாடு

tamil nadu

"திருமா மீதான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியின் புகார் மதுரை காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது"

By

Published : Dec 8, 2022, 10:35 PM IST

ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மதத்திற்கு எதிராகப் பேசியது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் மீது ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி அளித்த புகார், மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rss
Rss

சென்னை: ஆர்.எஸ்.எஸ். சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மதுரையைச் சேர்ந்த பி.ராமசாமி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், "கடந்த நவம்பர் 6ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிதம்பரம் தொகுதி எம்.பியும், விசிக தலைவருமான திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மதத்திற்கு எதிரான அவதூறு கருத்துகளைத் தெரிவித்தார். இது நாட்டில் ஒற்றுமையை குலைக்கும் வகையிலும், கலவரத்தையும் தூண்டும் வகையிலும் இருந்தது.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் மீது நவம்பர் 6ஆம் தேதியே சென்னையில் உள்ள சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபியிடம் புகார் அளித்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், மனுதாரர் அளித்த புகார் மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனால், மதுரை காவல் ஆணையரை எதிர் மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.

இதையடுத்து மதுரை காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் ராமசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

ABOUT THE AUTHOR

...view details