தமிழ்நாடு

tamil nadu

“என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்..” என்கவுண்டருக்கு முன்பு ரவுடி விஷ்வா எழுதிய கடிதத்தால் பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 8:49 PM IST

Rowdy Vishwa Encounter: போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றதாகக் கூறி போலீசாரல் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா, என்கவுண்டருக்கு முன் எழுதிய கடிதம் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

rowdy vishwa encounter in Sriperumbudur his letter written before his death create sensation
என்கவுண்டருக்கு முன்பு ரவுடி விஷ்வா எழுதிய கடிதத்தால் பரபரப்பு

ரவுடி விஷ்வாவை போலீசார் மிரட்டும் வீடியோ

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதுடைய குள்ளா என்கிற விஷ்வா என்கிற விஸ்வநாதன். இவர் மீது 5 கொலை உள்பட 25 வழக்குகள் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. மேலும், இவர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தின் ஏ+ கேட்டகிரி சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு 25 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்த விஷ்வா, கடந்த ஆகஸ்ட் மாதம் பிணையில் வந்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். அப்போது அவர் சில நாட்களாக கையெழுத்திடாத காரணத்தால் அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் திருப்பாஞ்சூர் காட்டுப்பகுதியில் விஷ்வா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், விஷ்வாவை சரணடைய சொன்னதாகவும், அப்போது தனிப்படைக் காவலர்களான வாசுதேவன் மற்றும் ரமேஷை ரவுடி விஷ்வா தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

ரவுடியின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தனிப்படை உதவி ஆய்வாளர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் விஷ்வாவை மார்பில் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ரவுடி விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காயமடைந்த காவலர்கள் காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தன் மீது போலி என்கவுண்டர் நடந்தால், அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன், உதவி ஆய்வாளர் தயாளன்தான் காரணம் என்று என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

என்கவுண்டருக்கு முன்பு ரவுடி விஷ்வா எழுதிய கடிதத்தால் பரபரப்பு

மேலும், அந்த கடிதத்தின் நகல் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளருக்கும் அனுப்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடைசியாக 28-08-2023 அன்று ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த ரவுடி விஷ்வாவை காக்க வைத்ததாகவும், அப்போது காவல் ஆய்வாளர் பரந்தாமனிடம் பேசிய உதவி ஆய்வாளர் தயாளன், “விஷ்வாவை சுட்டுடட்டுமா?” என்று கேட்டதாக தெரிவித்துள்ளார்.

என்கவுண்டருக்கு முன்பு ரவுடி விஷ்வா எழுதிய கடிதத்தால் பரபரப்பு

மேலும், அந்த வீடியோவும் தன்னிடம் இருப்பதாக அவரது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். மேலும், அவரது கடிதத்தில், “நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி நான் கையெழுத்திட சென்றபோது என்னிடம் கையெழுத்து வாங்காமல், சுட்டுவிடலாமா என காவல் துறை உதவி ஆய்வாளர் தயாளன் பேசியதில் இருந்து என்னை ஆய்வாளர் என்கவுண்டரில் சுட திட்டமிட்டுள்ளதாக அஞ்சுகிறேன்.

எனவே, என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன், உதவி ஆய்வாளர் தயாளன் உள்ளிட்ட காவல் துறையினரே பொறுப்பு. மேலும், என்னை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்ய ஆய்வாளர் பரந்தாமன், உதவி ஆய்வாளர் தயாளன் திட்டமிட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என குறிப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில், காவல் ஆய்வாளர் பரந்தாமனிடம் உதவி ஆய்வாளர் தயாளன் பேசிய வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக வெட்டிக் கொலை; நெல்லையில் தொடரும் கொலை குற்றங்கள்.. போலீசாரின் நடவடிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details