தமிழ்நாடு

tamil nadu

நிதி நிறுவன மோசடி செய்த 1500 பேர்களின் சொத்துகள் முடக்கம் - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

By

Published : Jun 20, 2023, 11:11 PM IST

பண முதலீடு மோசடி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளில் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மோசடி நிறுவனங்களுக்கு முகவர்களாக செயல்பட்ட 1500 பேரின் சொத்துக்களை முடக்கும் பணியினை மேற்கொள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

மோசடி நிறுவனங்களுக்கு முகவர்களாக செயல்பட்ட 1500 பேரின் சொத்துக்களை முடக்கப்படும் - டிஜிபி சைலேந்திர பாபு
மோசடி நிறுவனங்களுக்கு முகவர்களாக செயல்பட்ட 1500 பேரின் சொத்துக்களை முடக்கப்படும் - டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: பண முதலீடு மோசடி நிறுவனங்களுக்கு முகவர்களாக செயல்பட்ட 1500 பேரின் சொத்துக்களை முடக்கும் பணியினை மேற்கொள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்து பெரும் லாபம் அடைந்த முதலீட்டாளர்களிடமிருந்து இழப்பீடு பெறவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதிக வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று பல ஆயிரம் கோடி மோசடி செய்யும் முதலீடு நிறுவனங்கள் பெருகி வருகின்றன. அதில் முக்கிய மோசடி நிறுவனங்கள் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் கம்பெனி, எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ், ஹிஜாவு அசோசியேட்ஸ், எல்பின் நிதி நிறுவனம், திரிபுரா சிட்ஸ் மற்றும் யுனிவர்ஸ் டிரேடிங் சொல்யூஷன் உள்ளிட்டவைகள் அடங்கும்.

இந்த மோசடி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மோசடி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளில் தற்போதைய நிலை குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று (ஜூன் 20) டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது.

ரெட் கார்னர் நோட்டீஸ்: இந்தக் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கைது நடவடிக்கை மற்றும் பணம் இழந்தவர்களுக்கு பணம் விரைவாக திரும்பக் கிடைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த மோசடி நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்கள் பலரும் வெளிநாடுகளில் தலைமறைவாகி இருப்பதால் அவர்களை கைது செய்து இந்தியா கொண்டுவர 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மோசடி நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை நீதிமன்றம் உத்தரவைப் பெற்று, அவற்றை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்நிறுவனங்களில் முகவர்களாக செயல்பட்ட சுமார் 1500 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், அவர்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற வேண்டும் எனவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, முதலீட்டு நிறுவனங்களில் ஆரம்ப காலங்களில் சேர்ந்து பெரும் லாபம் அடைந்த முதலீட்டாளர்களிடமிருந்து இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மோதக், ஐஜி ஆசியம்மாள் மற்றும் முக்கியமான எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: போலி டாக்டர் வீட்டில் துப்பாக்கி, கள்ளநோட்டு பறிமுதல்; போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details