தமிழ்நாடு

tamil nadu

முரசொலி நிலம் பஞ்சமி நிலம் இல்லை.. வருவாய்த்துறை நீதிமன்றத்தில் வாதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 5:51 PM IST

Revenue Dept Report: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம், ஆவணங்களின்படி பஞ்சமி நிலம் இல்லை என வருவாய்த்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

revenue department filed a report in MHC regarding the Murasoli land issue
முரசொலி நில விவகாரம் தொடர்பாக வருவாய்த்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

சென்னை:திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான "முரசொலி"-யின் அறக்கட்டளை, சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட் (1,825 சதுர அடி) நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன், கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால், பட்டிலின ஆணையம் விசாரிக்க முடியாது எனவும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், முரசொலி சொத்து மாதவன் நாயர் என்கிற நில உரிமையாளரிடம் இருந்து, அஞ்சுகம் பதிப்பகத்திற்கு விற்பனை பத்திரம் மூலம் வாங்கப்பட்டு உள்ளதாகவும், 1974ஆம் ஆண்டு முதல் அந்த நிலத்தின் உரிமை முரசொலி அறக்கட்டளையின் வசம்தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணையில் உள்ளது. அப்போது, முரசொலி அறக்கட்டளை தரப்பில், பட்டியலின மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போதுதான் எஸ்.சி ஆணையம் தலையிட்டு தீர்வு காண முடியும் என்றும், உரிமையியல் வழக்கு தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள்தான் தீர்வு காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, பட்டியலின ஆணையத்தின் தரப்பில், பஞ்சமி நிலம் குறித்த புகாரைத்தான் விசாரிக்க வேண்டும் என்பதை உணர்ந்து விசாரணை நடத்துவதாகவும், சொத்தின் மீதான உரிமை யாருக்கு உள்ளது என தீர்மானிக்கும் வகையில் நீதிமன்றத்தின் பணியை ஆணையம் செய்யாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (ஜன.04) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருவாய்த்துறை சார்பில், "நுங்கம்பாக்கம் பதிவாளர் அலுவலக 1952ஆம் ஆண்டு ஆவணங்களின்படி, அந்த நிலம் பஞ்சமி நிலம் இல்லை. ரயத்துவாரி நிலம் என வகைபடுத்தப்பட்டு உள்ளது. பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை” என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 1912க்கு முன் நிலம் யாருக்குச் சொந்தமானதாக இருந்தது? அப்போது நிலம் என்னவாக இருந்தது? என வருவாய்த்துறைக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு, 50 ஆண்டு ஆவணங்கள் மட்டுமே இருப்பதாகவும், மற்ற ஆவணங்கள் கிடைக்கவில்லை எனவும் வருவாய்த்துறை தெரிவித்தது.

தொடர்ந்து, முரசொலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பஞ்சமி நிலமாக ஆவணங்கள் இருந்தால், பதிவுத்துறையில் யாருடைய பெயருக்கும் பட்டா மாறுதல் பதிவு செய்ய முடியாது. எந்த சந்தேகமும் இல்லாத நிலையில் மட்டுமே, பட்டா மாறுதல் செய்ய அனுமதி வழங்கப்படும். பட்டியலின ஆணையம் தரப்பில், புகார்கள் வரும் பட்சத்தில், அதை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

உத்தரவுகள்தான் பிறப்பிக்க முடியாது. பட்டியலின மக்களின் நலன் பாதிக்கப்படும்போது, விசாரணை நடத்தப்படுவது சாதாரணமான நடைமுறை, புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்பு தொடர்ந்து விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரை செய்யும்" எனத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 82 யானைகள் இறப்பு.. வனவிலங்கு ஆர்வலர்களின் கோரிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details