தமிழ்நாடு

tamil nadu

நெக்ஸ்ட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:டாக்டர் சங்கம் வலியுறுத்தல்!

By

Published : Jul 10, 2023, 5:24 PM IST

நெக்ஸ்ட் தேர்விற்கு எதிராக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிற்கு வலியுறுயுள்ளது.

resolution-should-be-passed-against-the-next-exam-doctors-association-for-social-equality-insists
நெக்ஸ்ட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:டாக்டர் சங்கம் வலியுறுத்தல்!

நெக்ஸ்ட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:டாக்டர் சங்கம் வலியுறுத்தல்!

சென்னை: இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர்களுக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ள நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நெக்ஸ்ட் தேர்வை ஒன்றிய அரசு புகுத்துவதை உடனடியாகக் கைவிட வேண்டும். இது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை வழங்குவதோடு, மாநில உரிமைகளுக்கும் எதிரானதாக உள்ளது" என தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது வரவேற்புக்குரியது.

நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கும். மருத்துவப் படிப்பில் சேர்வதற்கும், வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிப்பதற்கும் 'நீட்' என்ற நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. இது ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக உள்ளது.

இந்தத் தேர்வுகள், மாணவர்களை பயிற்சி மருத்துவராக்குவதற்கு முன்பு புத்தகப் புழுக்களாக மாற்றிவிடும். ஒரு தகுதித் தேர்வையே போட்டித் தேர்வாக மாற்றுவது சரியல்ல. இத்தேர்வை ஆயுஷ் போன்ற இதர மருத்துவப் படிப்புகளுக்கும் திணிக்க முயல்வது சரியல்ல. எனவே, நெக்ஸ்ட் தேர்வை கைவிட வேண்டும்.

ஒரு தேர்வு மூலம் மட்டுமே மருத்துவர்களை திறமையானவர்களாக உருவாக்கிவிட முடியும் என்பது தவறான பார்வையாகும். தேசிய அளவில் தேர்வுகளை மையப்படுத்துவதில் வணிக நோக்கமும், சித்தாந்த நோக்கமும் உள்ளன. தேர்வுகளையே லாபமீட்டும் வணிகமாக்கி, அதன் மூலம் கிடைக்கும் லாபம், ஒரு சில நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் இதில் அடங்கியுள்ளது. அது மட்டுமன்றி, 2030ல், 'ஒரே தேசம் - ஒரே மருத்துவ முறை' என்பதை கொண்டுவர ஒன்றிய அரசு முயல்கிறது.

அனைத்து மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து, ஒரு புதிய மருத்துவமுறையை, தனது வலதுசாரி சித்தாந்தத்திற்கு ஏற்ப உருவாக்க ஒன்றிய அரசு முயல்கிறது. இது நவீன அறிவியல் மருத்துவத்தின் வளர்ச்சிக்கு தடையாக மாறும். மேலும் அதை நீர்த்துப் போகச் செய்யும்.

மருத்துவக் கல்வியை காவிமயமாக்குவதற்காகவும், தேர்வுகளால் கிட்டும் வருவாயை ஒரு சில பெரு நிறுவனங்கள் அபகரிக்க உதவவும் ஒன்றிய அரசு, மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு நீட், மாணவர்களை சேர்ப்பதற்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு, வெளியேறும் தேர்வு நெக்ஸ்ட் போன்ற அனைத்தையும் மையப்படுத்துகிறது.
தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்கிறது.

இது மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை முழுமையாகப் பறிக்கிறது. அதுமட்டுமல்லாது கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானதாகும். எனவே, ஒன்றிய அரசு நெக்‌ஸ்ட் தேர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டும்.

நெக்ஸ்ட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம், நாளை தமிழ்நாடு முழுவதும் நடத்தும் கறுப்பு பட்டை அணிந்து வகுப்புகளுக்குச் செல்லும் போராட்டத்திற்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

இப்போராட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவ மாணாக்கர்களும் பங்கேற்க வேண்டும். நாடு முழுவதும் 100 சதவீதம் மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த முயல்வதை கைவிட வேண்டும். இது பல்வேறு குழப்பங்களை உருவாக்கும்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு மாநில அரசும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசும் மட்டுமே, இறுதி கட்டம் வரை, மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்திட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.

இளநிலை மருத்துவக் கல்வியின் பாடத்திட்டத்தில் பிற்போக்கான மாற்றங்களை செய்வதற்காக ,ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றிருப்பது வரவேற்புக்குரியது. அத்தகைய பிற்போக்கு மாற்றங்களை செய்வதற்கு மீண்டும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களின் பணி நேரத்தை அதிகரித்திருப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

நெக்ஸ்ட் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும், இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.மேலும் அனைத்து மருத்துவ மாணவர்கள் சங்கங்களையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்துவதோடு, பா.ஜ.க அல்லாத அனைத்து கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய அளவில் போராட்டம் நடத்தப்படும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க :Falaknuma train : தீ விபத்தில் நூற்றுக்கணக்கான மக்களை காத்த இளைஞர்... இளைஞரின் துரதிர்ஷ்டம்?

ABOUT THE AUTHOR

...view details