தமிழ்நாடு

tamil nadu

ரூ.100 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் - மா.சுப்பிரமணியன் தகவல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 6:55 PM IST

TN Health minister Ma.Subramanian: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் நிறுவப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

M.Subramanian
மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை: சென்னை, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 168, 169, 170, 172 ஆகிய வார்டுகளில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; “23.7.2009 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டமானது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் 1.43 கோடி குடும்பங்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரால் 2022ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.7,730 கோடி (ஆண்டுக்கு ரூ.1,546 கோடி) இத்திட்டத்தின் மூலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதில் அரசு மருத்துவமனைகள் 853, தனியார் மருத்துவமனைகள் 969 என மொத்தம் 1,822 மருத்துவமனைகள் இக்காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறது. இக்காப்பீட்டுத் திட்டத்தில் 1,513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளும், 8 சிறப்பு அறுவை சிகிச்சை முறைகளும், 52 முழுமையான பரிசோதனை முறைகளும், 11 தொடர் சிகிச்சை முறைகளும் உள்ளன.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உள்ள 1.43 கோடி குடும்பங்களுக்குள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் சமூக, பொருளாதார, சாதி வாரியாக 86,48,748 குடும்பங்கள் கண்டறியப்பட்டு இத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளனர்.

இத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஓர் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை மேற்கொள்ளலாம். மேலும், இத்திட்டம் தொடங்கப்பட்டத்தில் இருந்து தற்போது வரை பயனாளிகள் ரூ.4,780 கோடி காப்பீட்டுத் தொகையில் பயனடைந்துள்ளனர்.

இதில் ஒருங்கிணைந்த பிரதான் மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் ( 86,48,748 லட்சம் குடும்பங்களில்) 16,75,403 பயனாளிகள் ரூ.2,574 கோடி காப்பீட்டுத் தொகையில் பயனடைந்துள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை பொறுத்தவரை இந்தியாவிற்கே வழிகாட்டும் அமைப்பாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் யாரும் விடுபட்டு போகக்கூடாது என்கின்ற வகையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இந்த சிறப்பு முகாம்கள் இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், மருத்துவத்துறையின் அடுத்த கட்டமாக மருத்துவ ஆராய்ச்சி மையம் சென்னை, கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தோம். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.100 கோடி செலவில் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒன்று கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்கின்ற பெயரில் புதிய கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.

அதற்கான இடம் தேர்வு செய்து, திட்டப் பணிகள் மற்றும் வரைபடப் பணிகள் பொதுப் பணித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிக விரைவில் அந்தப் பணிகள் முடிவடைந்து, ஒப்பந்த பணிகள் தொடங்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:“2030-க்குள் பசிக்கு முற்றுப்புள்ளி” - அடுத்த ஜி20 தலைமையேற்ற பிரேசிலின் 3 முன்னுரிமைகள்!

ABOUT THE AUTHOR

...view details