தமிழ்நாடு

tamil nadu

தென் மாவட்டங்களில் நாளையும் (டிச.18) மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 4:57 PM IST

Red Alert: தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை (டிச.18) மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

red alert for 4 southern districts
4 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை:நாளை (டிச.18) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (டிச.17) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும். என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் நாளை (டிச.18) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தொடரும் மழை:வரும் டிசம்பர் 19ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், டிசம்பர் 20 முதல் 23 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரம்:வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): நாலுமுக்கு (திருநெல்வேலி) 19 செ.மீ, ஊத்து (திருநெல்வேலி) 17 செ.மீ, காக்காச்சி (திருநெல்வேலி) 15 செ.மீ, மாஞ்சோலை (திருநெல்வேலி) 13 செ.மீ, கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 11 செ.மீ, திருக்குவளை (நாகப்பட்டினம்) 9 செ.மீ, ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 9 செ.மீ, தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்) 8 செ.மீ, முத்துப்பேட்டை (திருவாரூர்) 8 செ.மீ அளவில் மழைப் பதிவாகி உள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள்:இன்று மற்றும் நாளையும் தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

19.12.2023:தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக் கடல் பகுதிகள்:இன்று 17.12.2023தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்ச தீவு பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

18.12.2023:கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்ச தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19.12.2023:லட்ச தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு - மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க:நெல்லையில் விடிய விடிய கனமழை.. தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details