தமிழ்நாடு

tamil nadu

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 அரியவகை குரங்கு குட்டிகள்!

By

Published : Feb 7, 2023, 6:42 AM IST

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட அரிய வகை 2 மேற்கு ஆப்பிரிக்க குரங்கு குட்டிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின குற்றப்பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 அரியவகை குரங்கு குட்டிகள் பறிமுதல்!
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 அரியவகை குரங்கு குட்டிகள் பறிமுதல்!

சென்னை:தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் வழக்கம்போல் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது 2 பிளாஸ்டிக் கூடைகளோடு சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிய அவரை தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதித்தனர். இதில் அவரது உடமைகளில் ஏதும் இல்லை. இருப்பினும் அவர் வைத்திருந்த 2 பிளாஸ்டிக் கூடைகளில், அரிய வகை குரங்கு குட்டிகள் இருப்பது தெரிய வந்தது. இவை மேற்கு ஆப்பிரிக்க வனப்பகுதியில் வசிக்கக்கூடிய சூட்டி மங்காவே மற்றும் காலர்டு மங்காவே என்ற 2 ஆப்பிரிக்க வகை அரிய குரங்கு குட்டிகளாகும்.

இதுகுறித்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வன உயிரின குற்றப்பிரிவுக்கு சுங்கத்துறையினர் தகவல் அளித்தனர். பின்னர் மத்திய வன உயிரின குற்றப்பிரிவு அலுவலர்கள் வந்து சோதனை செய்ததில், இந்த ஆப்பிரிக்க வகை குரங்குகள் மிகவும் ஆபத்தானவை என்றும், இவைகள் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் நிறைந்த வகைகளை சேர்ந்தவை என்றும் தெரிய வந்தது.

அதேநேரம் இந்த வகை குரங்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு, அனுமதி கிடையாது. மேலும் இந்த பயணி முறையான எந்த அனுமதியும் இல்லாமல், இந்த 2 குரங்குகளையும் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இரு குரங்குகளை கடத்தி வந்த அந்தப் பயணியை சுங்க அலுவலர்களும், மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு அலுவலர்களும் இணைந்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தி வந்த பயணி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து நாட்டுக்குச் சென்று வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. மேலும் கடத்தி வரப்பட்ட 2 குரங்கு குட்டிகளையும் கடத்தி வந்த நபரின் செலவிலேயே தாய்லாந்துக்கு அனுப்ப அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:அத்துமீறலுக்குள்ளாகும் நீர் தொட்டி: அன்று புதுக்கோட்டை.. இன்று விருதுநகர்... கைப்பற்றப்பட்ட நாயின் சடலம்!

ABOUT THE AUTHOR

...view details