தமிழ்நாடு

tamil nadu

ராமஜெயம் கொலை வழக்கு: 2ஆவது அறிக்கையினை தாக்கல் செய்த சிறப்பு புலனாய்வுக்குழு!

By

Published : Jun 10, 2022, 7:49 PM IST

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணையை மேற்கொள்ளும் சிறப்பு புலனாய்வுக்குழு இன்று இரண்டாவது விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

ராமஜெயம் கொலை வழக்கு
ராமஜெயம் கொலை வழக்கு

சென்னை:தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சியில் உள்ள அவரது வீட்டின் அருகே கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், ராமஜெயத்தின் மனைவி லதா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல் துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் என். ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி, சிபிஐ ஆகியவை 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை எனக்கூறி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

அதன்படி தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இந்தக்குழு முதல்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு இன்று(ஜூன் 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு புலனாய்வுக்குழு இரண்டாவது அறிக்கையினை தாக்கல் செய்தது. மேலும், விசாரணை தொடர்ந்து வருவதால் அடுத்தகட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, நான்கு வார கால அவகாசம் வழங்கி வழக்கை ஜூலை 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி ஆட்சியர் பெயரில் பணம் கேட்டு மோசடி.. தொடரும் கலெக்டர்கள் பெயரிலான சமூக வலைதள மோசடி!

ABOUT THE AUTHOR

...view details