தமிழ்நாடு

tamil nadu

கரோனா தொற்றால் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

By

Published : Aug 31, 2020, 11:22 PM IST

சென்னை: கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில் தற்போது கரோனா குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

Public Welfare Department Released about Corona Infection New Guidelines
மக்கள் நல்வாழ்வுத் துறை

கரோனா தொற்றால் பரிசோதனை, நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அறிவிப்பு, வீட்டு தனிமைப்படுத்துதல், கரோனா சிகிச்சைகள் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், "கரோனா தொற்று பரிசோதனை இல்லாமல் தமிழ்நாடு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா சோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்யலாம். அறிகுறி உள்ள முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் சோதனை கட்டாயம்.

அதிதீவிர அறிகுறி உள்ளவர்கள், அதிக பாதிப்பு உள்ளவர்கள், கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் அறிகுறி உள்ளவர்கள், மருத்துவமனையிலுள்ள அறிகுறி உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கட்டாயம் சோதனை செய்ய வேண்டும்.

வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவரையும் 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும். இவர்களில் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் கரோனா சோதனை செய்ய வேண்டும். தொற்று உறுதிசெய்யப்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும்.

தொற்று இல்லையென்றால் வீட்டுத் தனிமையில் வைக்க வேண்டும். வணிக ரீதியாக வந்து 72 மணி நேரத்தில் திரும்புபவர்களுக்கு கரோனா சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அறிகுறி இருந்தால் கரோனா சோதனை செய்ய வேண்டும். தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறியுடன் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களை வீட்டு கண்காணிப்பில் இருக்க அனுமதிக்கலாம்.

அவர்கள் தங்களின் உடல்நிலையை தினசரி கண்காணித்து கண்காணிப்பு அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டு தனிமையில் பத்து நாள்கள் இருந்தவர்களை குணமடைந்தவர்கள் ஆக அறிவிக்க வேண்டும்.

ஒரு தெருவில் 3 குடும்பங்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டால் அதைக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க வேண்டும். கிராமங்களில் கிராமம் முழுவதையும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க வேண்டும்.

நகராட்சி, மாநகராட்சிகளில் அந்தத் தெருவை மட்டும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்பில் அந்தப் பகுதியை மட்டும் அறிவிக்க வேண்டும்.

குடிசைப் பகுதிகளில் தொற்று உறுதிசெய்யப்பட்டால் குடும்பத்திலுள்ள நபர்கள் அனைவரையும் தனிமை மையத்தில் வைத்து கண்காணிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டுப் பகுதியில் தினசரி கிருமிநாசினி தெளிக்க வேண்டும். அந்தப் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டுப் பகுதியில் 100 வீடுகளுக்கு ஒரு பணியாளரை நியமித்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். அரசின் விதிமுறைகளின்படி சோதனை செய்ய வேண்டும்.

தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களை லேசான அறிகுறி உள்ளவர்கள், மிதமான அறிகுறி உள்ளவர்கள், வேறு நோய்கள், அதி தீவிர அறிகுறி உள்ளவர்கள் என்று மூன்று வகையாகப் பிரித்து சிகிச்சையளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details