தமிழ்நாடு

tamil nadu

கூடுதல் நீட் தேர்வு மையம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

By

Published : Mar 5, 2021, 5:15 PM IST

சென்னை: தமிழ்நாட்டிற்கு கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்கக் கோரிய மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள், தேசிய தேர்வு வாரியம், தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் நீட் தேர்வு மையம்
கூடுதல் நீட் தேர்வு மையம்

எதிர்வரும் 2021-22ஆம் கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்களிடம் விண்ணப்பங்களை வரவேற்று, தேசிய தேர்வு வாரியம், பிப்ரவரி 23ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

அதில், பிப்ரவரி 23 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும் எனவும், ஏப்ரல் 18ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் 255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கூடுதல் நீட் தேர்வு மையம்
இதில், தமிழ்நாட்டில் 28 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பெறத் தொடங்கிய சில மணி நேரங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டதாகக் கூறி, இந்தத் தேர்வு மையங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களிலிருந்து நீக்கப்பட்டன.
இதை எதிர்த்தும், தமிழ்நாட்டிற்கு கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கக் கோரியும் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரபிள்ளை ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 15ஆம் தேதிவரை அவகாசம் உள்ள நிலையில், மையங்களைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடும்
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டதாக அறிவித்துள்ளதால், மாணவர்கள் வெளி மாநில தேர்வு மையங்களையே தேர்வுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அவர்களைத் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதனால், தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
இந்த, மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, சத்திகுமார், சுகுமார குரூப் அமர்வு மத்திய - மாநில சுகாதாரத் துறை செயலாளர்களும், தேசிய தேர்வு வாரியமும், தேசிய மருத்துவ ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

ABOUT THE AUTHOR

...view details