தமிழ்நாடு

tamil nadu

உயர் நீதிமன்றத்தின் தினசரி வழக்குப் பட்டியலில் சாதிப்பெயர் உள்ளது ஏன்? - பாமக கேள்வி

By

Published : Dec 21, 2020, 1:13 PM IST

சாதியில்லா சமுதாயத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தெரிவித்த உயர் நீதிமன்றத்தின் தினசரி வழக்குப் பட்டியலில் ஏன் இன்னும் சாதிப்பெயர் உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் நீதிபதிகள் முன்பு குற்றம் சாட்டப்பட்டது.

Pmk ramadass ask cast based appointment in tnpsc, petition dismissed, MHC
Pmk ramadass ask cast based appointment in tnpsc, petition dismissed, MHC

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 1989ஆம் ஆண்டு முதல் இன்று வரை பணி நியமனம் செய்யப்பட்டவர்களில், குரூப் தேர்வு அடிப்படையில் சாதி வாரியாக எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பி இருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், தனது கேள்விக்கு தகவல் அறியும் உரிமை ஆணையம் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்றும், சாதி வாரியான தகவல்களை வழங்கலாம் என்று ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, தான் கேட்ட தகவல்களைத் தகவல் அறியும் உரிமை ஆணையம் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாமக சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் கே. பாலு, சாதியற்ற சமுதாயத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிமன்றம், தனது வழக்குப் பட்டியலில் இன்னும் வழக்கறிஞர்களின் சாதிப் பெயர்கள் இடம் பெற அனுமதித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், சாலைகள், தெருக்கள் வீதிகளில் உள்ள சாதிப் பெயரை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், இன்றும் வழக்குப் பட்டியலில் உள்ள சாதிப் பெயரை நீக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். ஜனநாயக வழியில்தான் பாமக போராட்டம் நடைபெறுவதாகவும், உச்ச நீதிமன்றம் போராட்டங்களை வேறு விதமாகப் பார்ப்பதாகவும் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த எந்தத் தடையும் இல்லை. ஆனால், போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபடலாமா? என்ற கேள்வியை எழுப்பினர். வழக்குப் பட்டியலில் உள்ள சாதிப்பெயரை நீக்குவது குறித்து நீதிமன்ற பதிவாளரிடம் முறையிடலாம் என்றும் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி மீண்டும் தகவல் அறியும் உரிமை ஆணையத்தை அணுகுமாறு கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க: ’பாமகவின் நியாயமான போராட்டத்தை காவல்துறை நசுக்குகிறது’

ABOUT THE AUTHOR

...view details