தமிழ்நாடு

tamil nadu

“தமிழக விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த சி.ஐ.எஸ்.எப் நியமிக்க வேண்டும்”..பாமக நிறுவனர் ராமதாஸ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 3:46 PM IST

PMK Founder Ramadoss Statement: “இந்தி மொழி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல” என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை:தமிழ்நாடு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (டிச.1வெளியிட்ட அறிக்கையில், "சென்னைக்குப் பயணிப்பதற்காகக் கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். 'நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது' என்று கூறிய பெண் பொறியாளரிடம், தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தியாவின் தேசிய மொழி இந்தி, வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று கூறிய மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயல் கண்டிக்கத்தக்கது.

விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரில் சிலர், தங்களின் பணி என்ன என்பதை மறந்து, இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பயணிகளை அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களிலும் அரசியல் கட்சியினர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அவர்கள் பலமுறை அத்துமீறியிருக்கின்றனர்.

இந்தி மொழி என்பது இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என்ற அடிப்படை தெரியாத அவர்கள் மக்கள் பிரதிநிதிகள், பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களிடம் இதுகுறித்து அறிவுரை கூற என்ன தகுதி இருக்கிறது. இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பதைக் காலம் காலமாக சில மத்திய அமைச்சர்களும், மத்திய அரசு அதிகாரிகளும் கூறி வருவதன் விளைவாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பணி வரம்பு என்ன என்பதையும், இந்தி நாட்டின் அலுவல் மொழி என்பதையும் அவர்களுக்கு அவர்களின் உயரதிகாரிகள் புரிய வைக்க வேண்டும். கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரிய வழக்கு... டிச.19-க்கு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details