தமிழ்நாடு

tamil nadu

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் திருவண்ணாமலையில் கைது!

By

Published : Jul 25, 2023, 10:33 PM IST

அண்மையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை திருவண்ணாமலையில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மது அருந்த பணம் இல்லாத விரக்தியில் செய்ததாக தெரியவந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் திருவண்ணாமலையில் கைது
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் திருவண்ணாமலையில் கைது

சென்னை:கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, நேற்று மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல் போலியானது என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து, போலீசார் விசாரணை நடத்திய போது திருவேற்காட்டை சேர்ந்த விஜய் என்பவரின் பெயரில் இருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது தனது உறவினரான ராஜி என்பவர் தற்போது அந்த எண்ணை உபயோகப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் ராஜியை பிடித்து விசாரணை நடத்தியதில், தன்னுடைய செல்போனை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தவறவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து, அந்த செல்போன் எண்ணில் இருந்து கடைசியாக கால் சென்ற நபரின் எண்ணை விசாரித்த போது, திருவண்ணாமலையைச் சேர்ந்த 16வயது சிறுவனிடம் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அச்சிறுவனிடம் விசாரித்த போது, தன்னுடைய தந்தை முருகனிடம் பேசியதும், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் அதே நபர் தான் என்பதையும் விசாரணையில் உறுதிசெய்தனர். அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.

கீழே கிடந்த செல்போனில் இருந்த அனைத்து எண்களுக்கும் கால் செய்த முருகன், தனது வீட்டிற்கும் அதே செல்போனிலிருந்து கால் செய்துள்ளார். இதனை அறிந்த போலீசார் திருவண்ணாமலை செங்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குத் தொடர்பு கொண்டு முருகனை அடையாளம் கண்டனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முருகன் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் கூலி வேலை செய்து வருவதும், நேற்று முன்தினம் இரவு மது குடிக்க பணம் இல்லாமல் அலைந்த போது கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் செல்போன் ஒன்று கீழே கிடந்ததாகவும், மது குடிக்க பணம் கிடைக்காத விரக்தியில் நேற்று காலை செல்போனில் இருந்த அனைத்து எண்ணிற்கும் கால் செய்து பேசிய முருகன், பின் 100க்கு கால் செய்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று மதியம் ஜெய் நகர் பார்க் அருகே இருந்த முருகனை சி.எம்.பி.டி (CMBT) போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பின் அந்த செல்போனை டாஸ்மாக்கில் ரூபாய் 200க்கு விற்று அதற்கு மது வாங்கி குடித்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:மாணவர்களை அரசியலில் ஈடுபடக்கூடாது என அச்சுறுத்துவதா? - சென்னைப் பல்கலைக்கழக சமூகவியல் துறை அறிவிப்பால் சர்ச்சை!

ABOUT THE AUTHOR

...view details