தமிழ்நாடு

tamil nadu

BF.7 பரவல் குறித்து மக்கள் பயப்படத் தேவையில்லை - மருத்துவர்கள் கருத்து!

By

Published : Dec 26, 2022, 7:04 PM IST

ஒமைக்ரானின் உருமாற்றம் அடைந்த BF.7 வைரஸ் பாதிப்புகள் அதிகளவில் இருக்காது என்றும், இதுகுறித்து மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

BF.7 பரவல் குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை.. மருத்துவர்கள் கருத்து!
BF.7 பரவல் குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை.. மருத்துவர்கள் கருத்து!

BF.7 பரவல் குறித்து மக்கள் பயப்படத் தேவையில்லை - மருத்துவர்கள் கருத்து!

சென்னை: கரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த BF.7 மாறுபாடு, கோவிட் 19 தொடக்க நிலையான சீனாவில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இது அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை குஜராத் (3) மற்றும் ஒடிசா (1) ஆகிய மாநிலங்களில் என நான்கு BF.7 மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உலகளாவிய BF.7 மாறுபாடு தாக்கத்தைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் அவசரக் கூட்டங்களை நடத்தின. இதில் முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதேநேரம் இன்று (டிச.26) கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஒமைக்ரான் பாதிப்பு முழு மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

அதன்படி 10-க்கும் மேற்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உருமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் X, BB என்கிற உருமாற்ற கரோனா பாதிப்புகளாக இருந்து கொண்டிருக்கின்றது. தற்போது உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் BF.7 என்கின்ற உள்உருமாற்றமடைந்த கரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. ஒமைக்ரான் உருமாற்றம் அடைந்த பிஎப்5 வகை கரோனா வைரஸ் பாதிப்பும் இருந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறுகையில், 'ஒமைக்ரான் வகையில் உருமாற்றம் அடைந்து BF.7 வகை வந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 3 அலைகளில் கரோனா தொற்றைப் பார்த்துள்ளோம். அதில் டெல்டா வகையில் மட்டும் பாதிப்புகள் அதிகளவில் இருந்தது.

அதன்பின்னர் வந்த ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புகள் அதிகளவில் இல்லை. தமிழ்நாட்டில் போடப்பட்ட தடுப்பூசியாலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்துள்ளது. இதனால், கரோனா தொற்று வேகமாகப் பரவாது.

சீனாவில் இருந்து வரும் தரவுகளின்படி, இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான மருத்துவர்களும், மருத்துவக் கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரியில் ஏற்கனவே கரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த அனுபவம் இருக்கிறது. மேலும் படுக்கை வசதிகளும், ஆக்ஸிஜன் வசதியும் தயார் நிலையில் உள்ளன.

கரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். இந்த வைரஸ் தொற்று பரவல் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை துணை பேராசிரியர் ரத்னபிரியா கூறுகையில், 'கரோனா தொற்றில் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BF.7 தற்போது சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ் 18 பேருக்கு பரவும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கு ஏற்கனவே செய்யப்பட்ட பரிசோதனையான ஆர்டிபிசிஆர் மூலம் நோய்த் தொற்றைக் கண்டுபிடிக்கலாம். வைரஸ் காய்ச்சலுக்கு வரும் அறிகுறிகளான சளி, உடல்வலி போன்றவை இதற்கும் இருக்கிறது. ஆர்டிபிசிஆர் மூலம் கரோனா தொற்றைக் கண்டறிந்த பின்னர், உருமாற்றம் அடைந்துள்ளதா என்பதையும் பரிசோதனை செய்தால்தான், எந்த வகை என்பதை கண்டறிய முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 196 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details