தமிழ்நாடு

tamil nadu

இயந்திர கோளாறால் தாமதமான ஏர் இந்தியா விமானம்: சிறப்புக் கூட்டத் தொடருக்கு மாற்று விமானங்களில் டெல்லி சென்ற எம்.பிக்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 7:59 PM IST

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடருக்காக தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் குழு சென்னையிலிருந்து டெல்லி செல்ல இருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மாற்று விமானத்தில் சென்றனர்.

இயந்திர கோளாரால் தாமதமான ஏர் இந்தியா விமானம்
இயந்திர கோளாரால் தாமதமான ஏர் இந்தியா விமானம்

சென்னை:நாடாளுமன்ற சிறப்புக்கூட்டுத் தொடருக்காக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டனர். இந்நிலையில் சென்னையில் இருந்து இன்று காலை 10:05 மணிக்கு டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் இயந்திர கோளாறு காரணமாக தாமதமாகப் புறப்பட்டது.

இதையடுத்து அந்த விமானத்தில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி செல்ல இருந்த, தமிழ்நாடு எம்பிக்கள் குழுவினர், காலை 11:30 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்ல இருந்த மேலும் 150-க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை விமான நிலையத்தில் விமானங்களின்றி தவித்தனர்.

சென்னையில் இருந்து காலை 10:05 மணிக்கு, டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், 168 பயணிகள் டெல்லி செல்ல இருந்தனர். இந்த விமானத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் குழு அமைச்சர் துரைமுருகன் தலைமையில், டெல்லி செல்வதற்காக காலை 9 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காக தயாராக இருந்த நிலையில் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இந்த ஏர் இந்தியா விமானம் வழக்கமாக டெல்லியில் இருந்து, சென்னைக்கு காலை 8:50 மணிக்கு சென்னை வந்துவிட்டு, அதன் பின்பு காலை 10:05க்கு மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்லும். ஆனால் இந்த விமானம் இன்று வழக்கத்தை விட முன்னதாக காலை 8:20 மணிக்கு சென்னை வந்த நிலையில், டெல்லி செல்லும் பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு அதிகாரிகள் தயாரானார்கள். பயனத்துக்கு தயரான ஏர் இந்தியா விமானத்தில், இயந்திர கோளாறு இருப்பதாகவும், அதை சரி செய்த பின்னரே விமானத்தை இயக்க வேண்டும் என, விமானி குறிப்பு எழுதி வைத்திருந்தது நிலையில், விமானம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விமான பொறியாளர்கள் விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு மேலாகியும், விமானம் சரி செய்யப்படாததால், அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் செல்லும், எம்பிக்கள் குழுவை வேறு விமானத்தில் மாற்றி அனுப்ப முடிவு செய்தனர். அதன்படி அமைச்சர் துரைமுருகன், எம்பிக்கள் திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை, காலை 11:30 மணிக்கு, சென்னையில் இருந்து, டெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மாற்றி அனுப்பி வைத்தனர்.

விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 11:34 மணிக்கு, தமிழக எம்பிக்கள் குழு மற்றும் வழக்கமான பயணிகளுடன் டெல்லி சென்றது. ஏர் இந்தியா விமானத்தில் செல்ல இருந்த மற்ற பயணிகள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர், மாற்று விமானங்களின்றி சென்னை விமான நிலையத்தில் தவித்தனர். மற்ற பயணிகளையும் மாற்று விமானங்களில் டெல்லிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்கள், அடிக்கடி பழுதடைந்து, விமான சேவைகள் பாதிக்கப்படுவதும், அதனால் பயணிகள் பெரும் அவதிப்படுவதும் தொடர்ந்து வருவது கடும் சிரமத்துக்குள்ளாக்குகிறது என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:காவேரியில் நீர் இல்லை என கர்நாடக அரசு பொய் சொல்கிறது - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details