தமிழ்நாடு

tamil nadu

சென்னை - சிங்கப்பூர் பயணிகள் விமானம் 12 மணி நேரம் தாமதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 2:30 PM IST

Chennai Airport: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக 12 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

சென்னை-சிங்கப்பூர் பயணிகள் விமானம் 12 மணி நேரம் தாமதம்
சென்னை-சிங்கப்பூர் பயணிகள் விமானம் 12 மணி நேரம் தாமதம்

சென்னை:சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று (டிச.14) அதிகாலை 1.40 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்காக 168 பயணிகள், நேற்று இரவு 11 மணிக்கு முன்பாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்காக தயார் நிலையில் இருந்துள்ளனர்.

சென்னை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், வழக்கமாக நள்ளிரவு 11.45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து, மீண்டும் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். அதன்படி, விமானம் நேற்று இரவு குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்கு வந்துள்ளது. ஆனால், அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகவும், அவற்றை சரி செய்த பின்பு விமானத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் விமானி குறிப்பு எழுதி வைத்துள்ளார்.

இதையடுத்து, அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று விமான நிலைய அதிகாரிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளாது. ஆனால், இன்று அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், காலை 6 மணி வரையிலும் புறப்படவில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்த சிங்கப்பூர் செல்லவிருந்த 168 பயணிகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான கவுண்டரை சூழ்ந்து கொண்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம், விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறுகள் சரி செய்யப்படவில்லை என்பதால், 10 மணிக்கு விமானம் புறப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் பயணிகள் அமைதியடைந்தனர். ஆனால், காலை 10 மணி ஆகியும் விமானம் புறப்படாமல் இருந்ததால், பயணிகள் மீண்டும் விமான நிலைய கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம், விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் சரி செய்யும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் பகல் 1 மணியளவில் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர்.

சென்னையிலிருந்து அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இயந்திரக் கோளாறுகள் காரணமாக 12 மணி நேரத்திற்கு மேலாக தாமதமானதால், இந்த விமானத்தில் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்த 168 பயணிகளும் விமான நிலையத்தில் அவதிக்குள்ளாயினர்.

இதையும் படிங்க:ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து இரண்டாம் நாள் கோலாகலம்.. ரெங்கநாதரின் மிளிரும் புகைப்படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details