தமிழ்நாடு

tamil nadu

பணி நிரந்தரம் செய்யாவிட்டால் முற்றுகை போராட்டம் - பகுதிநேர ஆசிரியர்கள் அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 5:17 PM IST

TN Govt: திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர்கள் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்த பகுதிநேர ஆசிரியர்கள்
கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்த பகுதிநேர ஆசிரியர்கள்

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 12 ஆண்டுகளாக 12 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால், இவர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இது இன்றளவும் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக பகுதிநேர ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த 181-வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அனைவரும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, இசை, தையல், ஒவியம் உள்ளிட்ட 8 பாடங்களுக்கு பகுதி நேரமாக வாரத்தில் 3 அரை வேளை நாட்கள் பணியாற்றுவதற்கு மாதம் 5 ஆயிரம் சம்பளத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் இன்றளவிலும் நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படவில்லை. இதனால், தங்களுக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் பணி வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களிடம், திமுக ஆட்சி அமைந்தவுடன் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியது, திமுக. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னரும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை நிலுவையிலேயே உள்ளது.

இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறும்போது, "முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளதால்தான் கோட்டை முற்றுகையிடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம். கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், கோட்டைக்கே வந்து என்னை சந்தித்துக் கேளுங்கள் என 'உங்கள் தொகுதி ஸ்டாலின்' நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் சொன்னதை முதல்வராகி இன்னும் செய்யாமல் உள்ளார். பலவழியில் நினைவுபடுத்தியும் அதை கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் எங்கள் எல்லோர் மத்தியிலும் உள்ளது.

பணி நிரந்தரம் கிடைக்காத ஏக்கத்தில், மரணம் அடைந்த பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்தை முதல்வர் நினைத்துப் பார்க்க வேண்டும். 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்கள் 12 ஆண்டுகளாக பரிதவிப்பதை மனிதாபிமானம் கொண்டு முதல்வர் மீட்டு, பணி நிரந்தரம் செய்து, எங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும்.

எங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டுமானால், தேர்தலின்போது அவர் அளித்த வாக்குறுதியான 181-ஐ நிறைவேற்றி, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஆணையிட்டால்தான் நடக்கும். இனியும் தாமதம் செய்ய வேண்டாம்.

நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ள முதல்வர் ஸ்டாலின், இதை கவனத்தில் கொள்ள வேண்டும். வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி சட்டமன்றமும் கூடவுள்ள நிலையில், கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கல்வி கற்க வந்த மணிப்பூரைச் சேர்ந்த 23 குக்கி மாணவர்கள்: இரு கரம் நீட்டி வரவேற்ற கண்ணூர் பல்கலைக்கழகம்.!

ABOUT THE AUTHOR

...view details